Last Updated : 13 Dec, 2020 12:50 PM

 

Published : 13 Dec 2020 12:50 PM
Last Updated : 13 Dec 2020 12:50 PM

ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயில் புத்தாண்டுக்குள் திறப்பு: 9 மாதங்களுக்குப் பின் பக்தர்களுக்கு அனுமதி

ஒடிசா மாநிலம் பூரி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் 9 மாதங்களுக்குப் பின் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது. பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவல் தொடங்கியவுடன் கோயில் நடை சாத்தப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம் கூட, மிகுந்த கட்டுப்பாடுகளுடன், குறிப்பிட்ட சிலர் மட்டுமே பங்கேற்க அனுமதி தரப்பட்டு நடந்தது. வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்களுக்கும், உள்ளூர் பக்தர்களுக்கும் கூட தேரோட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் 9 மாதங்களுக்குப் பின் புத்தாண்டுக்குள் கோயில் திறக்கப்பட்டு பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஸ்ரீ ஜெகநாத் கோயில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி கிருஷ்ணன் குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

''பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, 9 மாதங்களுக்குப் பின் ஜெகந்நாதர் கோயில் பக்தர்கள் தரிசனத்துக்காக புத்தாண்டுக்குள் திறக்கப்படும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கரோனா தடுப்பு, பாதுகாப்பு வழிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

கோயில் நிர்வாகத்தின் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பரிந்துரைகளை அரசு ஒப்புதலுக்காக அனுப்பி இருக்கிறோம். அரசு அனுமதித்தால், திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி கோயில் திறக்கப்படும். அரசு ஒப்புதலுக்குப் பின் விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும்.

கோயில் திறக்கப்பட்டவுடன் பூரி நகர மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு முதல் 5 நாட்கள் அவர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். கோயில் அமைந்திருக்கும் நகரிலேயே குடியிருந்துகொண்டு கடவுளைத் தரிசிக்க முடியாமல் பூரி மக்கள் தவித்தனர். அவர்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

புத்தாண்டு மற்றும் ஜனவரி 2-ம் தேதி அதிகமான அளவில் பக்தர்கள் வர வாய்ப்பு இருப்பதால், அந்த இரு நாட்கள் கோயில் நடை சாத்தப்பட்டு 3-ம் தேதி முதல் மீண்டும் கோயில் நடை திறக்கப்படும்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனத்துக்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று கொண்டு வர வேண்டும். ஆர்ஏடி, ஆர்டிபிசிஆர் பரிசோதனை இரண்டையும் செய்திருக்க வேண்டும். கோயிலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் அடையாள அட்டை இருந்தால்தான் கோயிலுக்குள் வர முடியும்.

முதல் கட்டமாக நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். அதன்பின் ஒருவாரத்துக்குப் பின் படிப்படியாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்''.

இ்வ்வாறு கிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x