

இந்திய எல்லைக் கிராமங்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவு முழுவதும் பதுங்குக் குழிகளில் தங்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் அடிக்கடி எல்லை தாண்டிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அத்துமீறலில் ஈடுபட்டுவரும் பாகிஸ்தான் ராணுவம் இதன் மூலம் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவருகிறது.
இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:
''ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருகிறது. கத்துவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் (ஐபி) ராணுவ நிலைகளைக் குறிவைத்தும் கிராமங்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடந்தது.
ஹிரானகர் செக்டரில் பன்சார் எல்லை புறக்காவல் பகுதியில் எல்லையைத் தாண்டி துப்பாக்கிச் சூடு சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வலுவான தகுந்த பதிலடியைக் கொடுத்தது.
இரு தரப்பினருக்கும் இடையே எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.45 மணி வரை தொடர்ந்தது. எல்லையோரம் வசிக்கும் கிராம மக்கள் அச்சத்தில் கிராமங்களை விட்டு வெளியேறினர். அவர்கள் நிலத்தடி பதுங்குக் குழிகளில் இருந்தபடி இரவைக் கழித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் இந்தியத் தரப்பில் எந்தச் சேதமும் ஏற்படவில்லை''.
இவ்வாறு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.