

கடந்த 2015-ம் ஆண்டு போடப்பட்ட பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை அடையும் பாதையில் இந்தியா பயணிப்பதோடு மட்டுமல்லாமல் இலக்குகளையும் கடந்து எதிர்பார்ப்புகளுக்கும் அதிகமாகச் செயல்படும். இதுவரை 21 சதவீதம் காற்று மாசுவை இந்தியா குறைத்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்
பாரீஸ் காலநிலை மாறுபாட்டு ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி 196 நாடுகளுக்கு இடையே ஒப்பந்தமானது. 2016-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதியிலிருந்து இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி உலக வெப்பமயமாக்கலை 2 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் குறைப்பது அதிலும் 1.5 டிகிரி செல்சியஸுக்கும் கீழாகக் குறைக்க வேண்டும். அதாவது தொழில் மயமாக்கலுக்கு முன்பிருந்த நிலைக்குச் செல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் பாரீஸ் காலநிலை மாறுபாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் நிறைவேறி 5 ஆண்டுகள் ஆகின்றன. இதையடுத்து, வருடாந்திரக் காலநிலை மாநாட்டை ஐ.நா.சபையுடன் சேர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், சிலி, இத்தாலி ஆகிய நாடுகள் சேர்ந்து இந்த ஆண்டு நடத்தின.
காணொலி மூலம் நேற்று நடந்த இந்த மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார்.
அதில் அவர் பேசியதாவது:
''காலநிலை மாறுபாட்டுக்கான பாரீஸ் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைகின்றன. காலநிலை மாற்றத்துக்கு எதிரான நமது போரில் முக்கியமான இலக்குகளை நோக்கி நாம் வைத்த அடியாகும். இன்று நமது இலக்குகளையும், பார்வைகளையும் உயர்வாக வைத்திருக்கிறோம். கடந்த காலத்தில் கடந்து வந்த பாதைகளையும் நாம் மறந்துவிடக் கூடாது.
நாம் நம்முடைய இலக்குகளை கண்டிப்பாகப் புதுப்பிக்க வேண்டும். இலக்குகள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளதால் சாதனைகளையும் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் குரல் கொடுக்க முடியும்.
பாரீஸ் காலநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தின் இலக்குகளை அடையும் பாதையில் செல்வதோடு மட்டுமல்லாமல், அந்த இலக்குகளையும் தாண்டி எதிர்பார்ப்புகளையும் கடந்து இந்தியா பயணிக்கும்.
இந்தியா இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் காற்று மாசுவை 21 சதவீதம் குறைத்து, 2005-ம் ஆண்டு இருந்த அளவில் கொண்டுவந்துள்ளது. எங்களின் சூரியமின் உற்பத்தித் திறன் கடந்த 2014-ல் 2.63 ஜிகாவாட்ஸ் இருந்த நிலையில் 2020-ல் 36 ஜிகாவாட்ஸாக உயர்ந்துள்ளது.
உலக அளவில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அளவு 4-வது இடத்தில் இருக்கிறது. 2022-ம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட்ஸாக உயர்த்துவோம். 2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட்ஸை எட்டுவோம்.
எங்களின் காடு வளர்ப்புத் திட்டமும், காட்டைப் பாதுகாப்பு உயிர்ச்சூழலைப் பாதுகாப்பதும் வெற்றிகரமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இந்தியா இரு முக்கிய விஷயங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. சர்வதேச சோலார் கூட்டமைப்பு மற்றும் பேரிடர் மீள் உள்கட்டமைப்புக்கு முன்னோடியாக இந்தியா இருந்து வருகிறது.
2047-ம் ஆண்டில் இந்தியா நவீன, சுதந்திர தினத்தை அதாவது 100-வது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும். இந்த பூமியில் உள்ள அனைத்து இந்திய மக்களுக்கும் நான் அளிக்கும் வாக்குறுதி, நூற்றாண்டு இந்தியா இலக்குகளை அடைவதோடு மட்டுமல்லாமல், இலக்குகளைக் கடந்தும் எதிர்பார்ப்புகளைக் கடந்தும் பயணிக்கும்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.