

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ராம் நாராயணனும், மீனாட்சியும் கடந்த 2014-ல் திருமணம் செய்துகொண்டனர். வரதட்சணை பிரச்சினையால் கடந்த 2018 ஜூனில் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதன் பிறகு ராம் நாராயண், வலுக்கட்டாயமாக மகனை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து, தனது குழந்தையை மீட்டுத் தரக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மீனாட்சி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி ஜே.ஜே.முனீர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தாய், தந்தையோடு வாழ்வது ஒவ்வொரு குழந்தையின் உரிமை ஆகும். குழந்தையின் தந்தை ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வருவாய் ஈட்டுவதாகவும் தாய்க்கு வருமானம் இல்லை என்றும் கூறுவதை ஏற்க முடியாது. பொருளாதார வசதியின் அடிப்படையில் குழந்தையை உரிமை கொண்டாட முடியாது. தாய் மீனாட்சி, முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தந்தையைவிட அவரது கல்வித் தகுதி அதிகம். குழந்தையை வளர்க்கும் பொறுப்பை தாயிடம் வழங்குகிறேன். எனினும் ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தையை அவரது தந்தை சந்தித்துப் பேசலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.