

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மேற்கு வங்கத்தில் பணிபுரியும் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்துக்கு கடந்த புதன்கிழமை சென்றார். கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், டைமண்ட் ஹார்பர் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார்.
அப்போது, ஜே.பி. நட்டாவின் வாகனம் உட்பட அவரது பாதுகாப்பு அதிகாரிகள் சென்ற கார்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், ஜே.பி. நட்டாவுக்கு காயம் ஏற்படவில்லை. இருந்தபோதிலும், பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் காயமடைந்தனர். மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க ஆளுநர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அம்மாநில தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிஆகியோர் நேரில் ஆஜராகுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் ஆஜராக தேவையில்லை எனமேற்கு வங்க அரசு தெரிவித்துவிட்டது.
இந்நிலையில், ஜே.பி. நட்டாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கபோலீஸ் ஐ.ஐி. ராஜீவ் மிஸ்ரா,டிஐஜி பிரவீன் குமார் திரிபாதி, டைமண்ட் ஹார்பர் மாவட்ட எஸ்.பி. போலா நாத் பாண்டே ஆகியோரை மத்திய அரசு பணிக்குமாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.