

மத்தியப் பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தின்போது 12 வயதுச் சிறுவனைப் பலிவாங்கிய துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக ஏராளமானோர் பங்கேற்கும் வசதி படைத்தவர்களின் குடும்ப விழாக்களில் மிகுதியான உற்சாகத்தை வெளிப்படுத்துவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்துவது வழக்கமாகி வருகிறது. விழாக்களின்போது துப்பாக்கிச் சூடு என்பது கொண்டாட்டமாக காற்றை நோக்கிச் சுடுவது ஆகும். இது பல நேரங்களில் விழாக்களில் பங்கேற்பவர்களையே பதம்பார்த்து விடுகிறது என்பதுதான் சோகம்.
மத்தியப் பிரதேசத்தில் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள லஹார்ச்சி கிராமத்தில் இத்தகைய ஓர் அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கலிபீத் காவல் நிலையப் பொறுப்பாளர் ஜிதேந்திர சவுகான் கூறியதாவது:
''ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள லஹார்ச்சி கிராமத்தில் திருமண விழா ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 வயதுச் சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு திருமண ஊர்வலத்தின் ஒரு பகுதியாக இருந்த, கூட்டத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ஒருவர் தனது துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இச்சம்பவத்தில் அவரது அருகில் நின்று கொண்டிருந்த சிறுவன் மீது குண்டு பாய்ந்தது.
ஊர்வலத்தின்போது உடன்வந்த சிலர் உடனடியாக குண்டடிபட்ட சிறுவனை அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் வந்து பார்த்ததும் சிறுவன் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இச்சம்பவம் குறித்து கலீபீத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் ஊர்வலத்தில் யார் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியது என்பது உடனடியாகக் கண்டறிய முடியவில்லை. இதுகுறித்து விசாரித்து துப்பாக்கிச் சூட்டை நடத்திய அடையாளம் தெரியாத நபரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன''.
இவ்வாறு காவல்நிலையப் பொறுப்பாளர் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற இன்னொரு சம்பவத்தில் திருமண ஊர்வலத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்திய மணமகன் கைது செய்யப்பட்டார்.