பெண்களுக்கு எதிரான வன்முறை புகார்; உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைப்போம்: மேற்கு வங்க அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் எச்சரிக்கை

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி : கோப்புப்படம்
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி : கோப்புப்படம்
Updated on
2 min read

மேற்கு வங்கத்தில் இருந்து பெண்களுக்கு எதிராக 260 புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் அடுத்த 15 நாட்களில் மாநில அரசு எடுக்காவிட்டால், இந்த விவகாரத்தை நாங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைப்போம் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிராக 267க்கும் மேற்பட்ட புகார்கள் மாநில மகளிர் ஆணையத்தில் பெறப்பட்டும் அந்தப் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் கடந்த ஓராண்டாக எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்க தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, 2 நாட்கள் பயணமாக கொல்கத்தாவுக்கு இன்று சென்றார்.

இந்தப் புகார்கள் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கொல்கத்தாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''கடந்த ஓராண்டாக மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து பதிவு செய்த புகார்கள் உள்பட 267க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றுள்ளது. ஆனால், எந்தப் புகார் மீதும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. விசாரணையும் நடக்கவில்லை.

மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா
மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா

மேற்கு வங்கத்தில் உள்ள போலீஸார் இந்தப் புகார்களுக்கு எந்த பதிலும் அளிக்காதது வேதனையாக இருக்கிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீஸ் டிஜிபியும், தலைைமைச் செயலாளரும் என்னைச் சந்திக்காதது இது முதல் முறை அல்ல. ஏதும் அறியா அவர்களின் கீழ்நிலை அதிகாரிகளைத்தான் என்னைச் சந்திக்க அனுப்புகிறார்கள்.

கடந்த 8 மாதங்களாக 260 புகார்கள் பெற்றும் தேசிய மகளிர் ஆணையத்துக்கு எந்தவிதமான அறிக்கையும் அனுப்பப்படவில்லை. இது தொடர்பாக நான் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதப்போகிறேன். எங்கள் கடிதத்துக்கு மாநில அரசு 15 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், இந்த விவகாரத்தை நாங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்துவிடுவோம்.

இந்தப் பயணத்தின்போது நான் ஆளுநரைச் சந்தித்தேன். அனைத்தையும் அரசு கட்டுப்படுத்துகிறது என்று சொல்லவில்லை. ஆனால், புகார்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கையாவது அரசு எடுத்திருக்கலாம்.

மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியிலிருந்தும், பழங்குடிகள் வாழும் பகுதியிலிருந்தும் அதிகமான பெண்கள் கடத்தப்படுவது குறித்து நாங்கள் கவலை தெரிவித்துள்ளோம்”.

இவ்வாறு ரேகா சர்மா தெரிவித்தார்.

ஆனால், மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சசி பஞ்சா கூறுகையில், “மாநிலத்தில் பெண்களும், நாட்டின் பிற பகுதிகளில் பெண்களும் பாதுகாப்பாகத்தான் வசிக்கிறார்கள். பெண்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்திருக்கிறது. மாநில அரசின் மீதான புகார்கள் ஆதாரமற்றவை. அரசியல் உள்நோக்கத்தில் கூறப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in