மந்திரவாதியிடம் ஆசி பெற்ற நிதிஷ் குமார்: சமூக இணையதளங்களில் வீடியோ வெளியானதால் சர்ச்சை

மந்திரவாதியிடம் ஆசி பெற்ற நிதிஷ் குமார்: சமூக இணையதளங்களில் வீடியோ வெளியானதால் சர்ச்சை
Updated on
1 min read

பிஹார் சட்டப்பேரவைக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 2 கட்ட தேர்தல் முடிந்து 3-ம் கட்ட தேர்தல் வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இக்கூட்டணி சார்பில் இப்போதைய முதல்வர் நிதிஷ் குமார் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது பாஜக கூட்டணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. 3-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய இணை அமைச்சருமான கிரிராஜ் சிங் சமூக இணையதளங்களில் ஒரு வீடியோ காட்சியை வெளி யிட்டுள்ளார்.

லாலுக்கு எதிராக ஸ்லோகம்

அதில், மந்திரவாதி ஒருவருடன் நிதிஷ் குமார் அமர்ந்துள்ளார். இவர்களுடன் நிதிஷ் கட்சியின் மோகமா தொகுதி வேட்பாளர் நீரஜ் குமாரும் உள்ளார். அப்போது நிதீஷுக்கு ஆதரவாக மந்திரவாதி ஸ்லோகங்களை சொல்கிறார். இருவருக்கிடையிலான உரை யாடல் தெளிவாக கேட்கவில்லை. எனினும், ‘கவலைப்பட வேண்டாம்’ என்று நிதிஷ் குமாரிடம் மந்திரவாதி கூறுவது தெளிவாக கேட்கிறது. மேலும் நிதிஷ் குமாரின் பரம எதிரியாக இருந்து இப்போது அவருடன் கைகோர்த்துள்ள லாலு பிரசாத் யாதவுக்கு எதிராகவும் மந்திரவாதி சில ஸ்லோகங்களைக் கூறுகிறார்.

இந்த வீடியோ சமூக இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள லாலு பிரசாத்துக்கு எதிராக ஸ்லோகம் சொல்வது போன்ற காட்சியால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஹார் முன்னாள் முதல்வரான லாலு கூறும்போது, “இந்த மந்திரவாதியைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. நான் அவரைவிட பெரிய மந்திரவாதி” என்றார். கிரிராஜ் சிங் கூறும்போது, “லாலு பிரசாத் பிரதமரை தாக்கி பேசும்போது, தீய சக்திகளை ஒழிப்பதற்கான சூத்திரம் தனக்கு தெரியும் என்றார். அதற்கு முன்பு தனக்கு எதிரான சதி வேலையில் ஈடுபடும் இளைய சகோதரரை (நிதிஷ்) அவர் ஒழிக்க வேண்டும்” என்றார்.

இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன்ராம் மாஞ்சி கூறும்போது, “சோஷலிச தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் நிதிஷ் குமார், மந்திரவாதியை சந்தித்ததன் மூலம் பழமைவாதத்தில் ஊறியிருக்கிறார் என்பது நிரூபணமாகிறது” என்றார்.

இந்த வீடியோ குறித்து நிதிஷ் குமாரோ, அவரது கட்சியின் மூத்த தலைவர்களோ இதுவரை கருத்து எதுவும் கூறவில்லை. எனினும், அக்கட்சியின் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு மூத்த தலைவர் கூறும்போது, “இந்தத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால் பாஜக அச்சமடைந்துள்ளது. இதன் வெளிப்பாடாகத்தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in