சிறுவர்கள், முதியோர், கர்ப்பிணிகளுக்கு ஏழுமலையான் தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம் அனுமதி

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

கரோனா பரவலால் கடந்த 9 மாதங்களாகச் சிறுவர்கள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசின் நிபந்தனைகளின்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏழுமலையான் தரிசனத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி முதல், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், கோயிலில் ஆகம விதிகளின்படி ஏழுமலையானுக்கு தினமும் பூஜைகளும், நைவேத்தியமும் தொடர்ந்தன.

இந்நிலையில், மத்திய அரசு வழங்கிய அனுமதியின் பெயரில் மீண்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கரோனா நிபந்தனைகளின்படி சாமியை தரிசனம் செய்ய பக்தர்களுக்குக் கடந்த ஜூன் மாதம் முதல் அனுமதி வழங்கப்பட்டது.

சர்வ தரிசனம், ரூபாய் 300 சிறப்பு தரிசனம், கல்யாண உற்சவம், விஐபி பிரேக் தரிசனம் போன்றவை மட்டுமே தற்போது அனுமதிக்கப்படுகிறது. இதில், ரூ.300 சிறப்பு தரிசனம் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள், கர்ப்பிணிகள் மத்திய அரசின் நிபந்தனைப்படி சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக, பலர் நேர்த்திக் கடன்களைச் செலுத்த முடியாமல் திருப்பதி தேவஸ்தானத்திற்கு முறையிட்டு வந்தனர்.

இதனால் இனி ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசனம் மூலம் 10 வயதுக்கு உட்பட்டோர், 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகளும் கரோனா நிபந்தனைகளைக் கடைப்பிடித்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தேவஸ்தானம் நேற்று (டிச.11) மாலை அனுமதி வழங்கியது.

அதன்படி, இனி முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மேற்கண்டபடி அனுமதி வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in