

நான் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றபின் காங்கிரஸ் தலைமை அரசியல் கவனத்தை இழந்துவிட்டது. 2004-ல் நான்தான் பிரதமராக வருவேன் என்று கட்சியில் பலரும் எதிர்பார்த்தார்கள் என்று மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது சுயசரிதைக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
“தி பிரெசிடெண்ட் இயர்ஸ்” என்ற தலைப்பில் தனது இறப்புக்கு முன் பிரணாப் முகர்ஜி சுயசரிதைக் குறிப்பு எழுதினார். இந்த நூல் 2021-ம் ஆண்டு ஜனவரியில் வெளியாக உள்ளது. இதனை ரூபா பதிப்பகத்தார் வெளியிட உள்ளனர்.
பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக இருந்தபோது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடி ஆகிய இரு பிரதமர்களுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றவர்.
கரோனா பாதிப்பாலும் தீவிர உடல்நலக் குறைவாலும் பாதிக்கப்பட்டிருந்த பிரணாப் முகர்ஜி கடந்த ஜூலை 31-ம் தேதி உயிரிழந்தார். தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் தலைமையை மாற்ற வேண்டும், புதிய எழுச்சிமிக்க தலைமை தேவை, உற்சாகமான தலைமை தேவை என்று 23 மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் இந்த நூல் வெளியாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சித் தேர்தலும் நடக்க இருக்கும் நிலையில் இந்த நூல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நூல் குறித்து பிரணாப் முகர்ஜியின் சில குறிப்புகளை மட்டும் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் அடைந்த தோல்வி குறித்து பிரணாப் முகர்ஜி பதிவிட்ட குறிப்பில், “கடந்த 2004-ல் நான்தான் பிரதமராக வருவேன் என்று காங்கிரஸ் கட்சிக்குள் சில தலைவர்கள் எண்ணம் கொண்டிருந்தார்கள். 2014-ம் ஆண்டு தோல்வியைக் காங்கிரஸ் கட்சி தவிர்த்திருக்கலாம்.
இந்தக் கண்ணோட்டதுக்கு நான் ஆட்படவில்லை என்றாலும், நான் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றபின், காங்கிரஸ் கட்சியின் தலைமை அரசியல் கவனத்தை இழந்துவிட்டதாகவே நான் நம்புகிறேன்.
காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரங்களை சோனியா காந்தியால் கையாள முடியவில்லை. டாக்டர் மன்மோகன் சிங் தொடர்ந்து சபைக்கு வராமல் இருந்ததால், எந்த எம்.பி.க்களுடனும் நேரடியான தொடர்பை வளர்த்துக் கொள்வதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவரின் செயல்பாடுகள் குறித்து பிரணாப் முகர்ஜி தனது குறிப்பில், “ நிர்வாகத்தை வழிநடத்துவதில் தார்மீக உரிமை பிரதமருக்குத்தான் இருக்கிறது என நான் நம்புகிறேன். பிரதமரும், அவரின் நிர்வாகமும் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே ஒட்டுமொத்த தேசமும் பிரதிபலிக்கும்.
டாக்டர் மன்மோகன் சிங் பெரும்பாலும் கூட்டணி ஆட்சியைக் காப்பாற்றுவதிலேயே ஆர்வமாக இருந்தார். நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமராக வந்தபின் சர்வாதிகாரப் போக்குடனே ஆட்சியைக் கொண்டு சென்றார். இதனால் அரசு, நாடாளுமன்றம், நீதிமன்றம் ஆகியவற்றுக்கு இடையே கசப்பான உறவுதான் இருந்தது. 2-வது முறையாக மோடி பிரதமராக வந்தால், இதுபோன்ற விவகாரங்களில் சிறப்பான புரிதல் இருக்குமா என்பதைக் காலம்தான் பதில் சொல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க அதிபர் இந்தியா வருகையின்போது நடந்த சிறிய உரசல் குறித்தும் இந்த நூலில் பிரணாப் குறிப்பிட்டுள்ளார். அதாவது கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது, அமெரிக்க அதிபர் அவருக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காரில்தான் அவர் பயணிக்க வேண்டும். இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்கும் காரில் பயணிக்க முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைக் குறிப்பிட்ட பிரணாப் முகர்ஜி, “அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா பயணித்த காரிலேயே என்னையும் பயணிக்க அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், நான் பணிவுடனும், உறுதியாகவும் மறுத்துவிட்டேன். நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அமெரிக்க அரசு அதிகாரிகளிடம் என் கருத்துகளைத் தெரிவித்தார்கள். அதில், 'இந்தியாவில் இந்தியக் குடியரசுத் தலைவருடன் உங்கள் அதிபர் பயணிக்கும்போது, எங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அர்த்தம்' எனத் தெரிவித்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.