

தாத்ரி போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை பாஜக ஒருபோதும் ஆதரித்தது இல்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு வெளியாகும் வங்காள மொழி பத்திரிகை ஆனந்த் பஜார் பத்ரிகா. இந்தச் செய்தித்தாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள பேட்டியில், "தாத்ரி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஆனால், அச்சம்பவத்துக்கு மத்திய அரசை குறை கூறுவதற்கு பின்னணியில் தர்க்கரீதியாக என்ன நியாயம் இருக்கிறது?
தாத்ரியில் நடந்த சம்பவமும், பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட சம்பவமும் வருந்தத்தக்கது. ஆனால், அதற்காக ஏன் மத்திய அரசை குறை கூற வேண்டும்?
பாஜக எப்போதுமே மதச்சார்பின்மையை பின்பற்றுகிறது. வேற்றுமையில் மதச்சார்பின்மை கொள்கையிலிருந்து விலகியதில்லை. தாத்ரி போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை பாஜக ஒருபோதும் ஆதரித்தது இல்லை.
பாஜக மதவாதத்தை தூண்டுவதாகவும், சமூகத்தில் பிளவு உண்டாக்குவதாகவும் கூறும் எதிர்க்கட்சிகள் சில சூழ்நிலைகளை சாதகமாக்கிக் கொண்டு மக்களிடையே பிளவை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.
பாஜக இதற்கு முந்தைய காலகட்டங்களிலும் இதுபோன்ற சவால்களை சந்தித்திருக்கிறது. ஆனால், போலி மதச்சார்பின்மையை பாஜக ஒருபோதும் எதிர்க்கத் தவறியதில்லை. தற்போதைய சூழலில், இப்பிரச்சினைகளுக்கு உரிய விவாதம் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்" என்று அந்தப் பேட்டியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பக்ரீத் பண்டிகையின்போது, முகமது இக்லாக் என்பவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கிளம்பிய வதந்தியால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் ஊடகம் வாயிலாக மவுனம் கலைத்திருப்பது இதுவே முதன்முறையாகும்.
அதேபோல், பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது தொடர்பாகவும் பிரதமர் முதல்முறையாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.