

கேரள மாநிலத்தில், புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயில் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் 14 நாட்களுக்குக் கோயில் மூடப்படுகிறது. இரு வாரங்களுக்கு பக்தர்கள் யாருக்கும் அனுமதியில்லை என்று திருச்சூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
குருவாயூர் தேவஸம்போர்டில் பணியாற்றும் 153 ஊழியர்களுக்கு நேற்று நடத்தப்பட்ட ஆன்ட்டிஜென் பரிசோதனையில் 22 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, கோயிலை மூடும் முடிவை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
குருவாயூர் தேவஸம் நிர்வாகக் கமிட்டியின் கூட்டம் நேற்று இரவு திடீரென அவசரமாகக் கூடியது. இந்தக் கூட்டத்தில்தான் கோயிலை 2 வாரங்களுக்கு மூடுவது, பக்தர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது.
கேரளாவில் கரோனா வைரஸ் பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. திருச்சூர் மாவட்டத்தில் மட்டும் வியாழக்கிழமை 393 பேரும், நேற்று 272 பேரும் புதிதாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு வாரங்களுக்கு குருவாயூர் கோயில் மூடப்பட்டாலும், கோயிலில் மூலவருக்குப் பூஜைகள், ஆராதனைகள், அபிஷேகங்கள் போன்றவை வழக்கம் போல் நடைபெறும் எனக் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் (12-ம் தேதி) தீபஸ்தம்பம் பகுதி தரிசனம், துலாபாரம் உள்ளிட்டவற்றுக்கான ஆன்லைன் முன்பதிவு அனைத்தும் அடுத்த 2 வாரங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருமணத்துக்காக ஏற்கெனவே கோயிலில் முன்பதிவு செய்தவர்கள், கோயிலுக்கு வந்து சேர்ந்தவர்கள் திருமணத்தை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் கரோனா விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆனால், சனிக்கிழமை முதல் எந்தவிதமான திருமணமும் அடுத்த இரு வாரங்களுக்கு நடத்த அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவஸம்போர்டு ஊழியர்கள் அனைவருக்கும் அடுத்த 3 நாட்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்படும். அதுமட்டுமல்லாமல் மாதந்தோறும் பிசிஆர் பரிசோதனை செய்யவும் கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் குருவாயூர் கோயில், தரிசனத்துக்காகத் திறக்கப்பட்டது. ஆனால், கேரளாவில் 2-வது சுற்று கரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் மீண்டும் மூடப்பட்டது. அதன்பின் மீண்டும் திறக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 10-ம் தேதி முதல் பக்தர்கள் கடும் கரோனா பாதிப்பு நெறிமுறைகளுடன் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.