

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டப் பணிகள், கரோனா வைரஸ் தொற்று காலத்தில் 243 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த கிராமங்களுக்கு திரும்பினர். குறிப்பாக ஒடிசா, பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்தவர்கள் அவரவர் மாநிலங்களுக்கு திரும்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக பி.ஏ.இ.ஜி. என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் சுமார் 2 கோடி தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். வாழ்வாதாரத்தை இழந்த அவர்கள், ‘நூறு நாள் வேலை' என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பயன் அடைந்து வருகின்றனர்.
மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்துக்காக நடப்பாண்டில் ரூ.84,900 கோடியை மத்திய நிதித் துறை ஒதுக்கியுள்ளது. இதில் இதுவரை ரூ.76,800 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. பத்து சதவீத தொகை மட்டுமே மீதமுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.50,000 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. கரோனாவால் எழுந்த அசாதாரண சூழ்நிலையால் இந்த ஆண்டு கூடுதல் நிதி செலவாகியுள்ளது. ஊரக வேலை உறுதி திட்டப் பணிகள் 243 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது.
ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் தங்களது சொந்த நிதியில் இருந்து நூறு நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியத்தை வழங்கியுள்ளன. ஜார்க்கண்ட், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நூறு நாள் வேலை திட்டத்தில் பயனடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை கோரியவர்களில் 13 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை. கரோனாவால் இத்திட்டத்தில் வேலை கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் அனைவருக்கும் அரசால் வேலை வழங்க முடியவில்லை.
உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் வேலை கோரிய நான்கில் ஒரு சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை. ராஜஸ்தான், மேற்குவங்க மாநில அரசுகள் நிலைமையை சமாளித்து தேசிய சராசரியைவிட அதிகம் பேருக்கு வேலை வழங்கியுள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில ஊரகவேலை உறுதி திட்ட ஆணையர்பி.சி.கிஷன் கூறும்போது, "நடப்பாண்டில் நூறு நாள் வேலைதிட்டத்தில் கூடுதல் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் தொடர்பாக கிராம மக்களிடம் போதிய விழிப்புணர்வு உள்ளது. அவர்கள் தங்களது வேலைவாய்ப்பு உரிமையை கேட்டுப் பெறுகின்றனர்" என்றார்.