

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை சொர்க்க வாசல் வழியாக தரிசிப்பதற்கான இணையவழி முன்பதிவு நேற்று தொடங்கியது. வரும் 25-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட உள்ளனர்.
வரும் 25-ம் தேதி வைகுண்ட ஏகாதசியும் மறுநாள் துவாதசியும் வருவதால் அனைத்து வைஷ்ணவ கோயில்களிலும் சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சொர்க்க வாசல் மூலம் மூலவரை தரிசனம் செய்ய முடியும் இருப்பதால், இவ்வழியாக சென்று சுவாமியை தரிசிக்க பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். இதனால் முக்கிய கோயில்கள் அனைத்திலும் பக்தர்கள் அலைமோதுவர்.
இதுவரை திருப்பதி ஏழு மலையான் கோயிலில் மேற்கூறிய 2 நாட்கள் மட்டுமேசொர்க்க வாசல் திறப்பது ஐதீகமாக இருந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு வரும் 25-ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனினும் தினமும் 20 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்காக ஆகம வல்லுநர்களி டம் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி முடிவு செய்துள்ளனர். இதற்கு பக்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிப்பதற்கான இணையவழி முன்பதிவு நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. www.tirupatibalaji.ap.gov.in என்கிற இணையதள முகவரியில் ரூ.300 செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். விற்பனை தொடங் கிய 2 மணி நேரத்திலேயே 50 ஆயிரம் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டன.
141 கோயில்களில் திருப்பாவை
திருமலை திருப்பதி தேவஸ் தானம் சார்பில் வரும் மார்ச் 16-ம்தேதி முதல் ஜனவரி 13-ம்வரை திவ்ய பிரபஞ்சனம் திட்டம் சார்பில் திருப்பதி உட்பட ஆந்திரா, தெலங்கானா, தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள முக்கிய வைஷ்ணவ கோயில்கள் மற்றும் வட இந்தியாவின் சில முக்கிய கோயில்கள் என மொத்தம் 141 கோயில்களில் தொடர்ந்து 30 நாட்களுக்கு ஆண்டாள் அருளிய திருப்பாவை பாராயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.