

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி நாளை தெலங்கானா மாநிலத்தில் பந்த் நடத்த எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதன் காரணமாக கடைகள் அடைக்கப் படுவதுடன் பஸ்கள் போக்குவரத்தும் முடங்கும் எனத் தெரிகிறது.
காங்கிரஸ், தெலுங்கு தேசம், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகள் ஹைதராபாத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி நாளை பந்த் நடத்துவது என முடிவு செய்தனர்.
தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிப்படி, விவசாய வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தாருக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பந்த் நடைபெறுகிறது.
பந்த் காரணமாக மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்றும், பஸ்கள், ஆட்டோக்கள் இயங் காது எனவும், அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்காது என்றும் எதிர் கட்சியினர் அறிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் விவசாயிகளுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரித் துள்ளனர். இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.