

வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் மட்டுமே விவசாயிகள் வீட்டுக்குச் செல்வார்கள் என்று பாரதிய கிசான் யூனியன் தெரிவித்துள்ளது..
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லைகளில் 16-வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளடைவில் பல்வேறு மாநில விவசாயிகளும் இதில் கலந்துகொண்டனர். டெல்லியின் சிங்கு, திக்ரி, காசிப்பூர் மற்றும் சில்லா (டெல்லி-நொய்டா) எல்லை முனைகளில் விவசாயிகள் முகாமிட்டுப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தால் மட்டுமே விவசாயிகள் வீட்டுக்குச் செல்வார்கள் என்று பாரதிய கிசான் யூனியன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட், ஏஎன்ஐயிடம் கூறியதாவது:
''பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் அழைப்பு அனுப்பினால், விவசாயிகள் மேலும் உரையாடலின் வாய்ப்புகள் குறித்து வேண்டுமென்றே ஆலோசிப்பார்கள். மத்திய அரசு பரிந்துரைத்த திருத்தங்களை அவர்கள் விரும்பவில்லை.
மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான நிலைப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது.
இருவரும் தங்கள் முடிவுகளிலிருந்து இறங்கிவர வேண்டும். மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். அதன்பின்னர் விவசாயிகள் வீட்டிற்குச் செல்வார்கள்''.
இவ்வாறு ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார்.