

உத்தரப்பிரதேசத்தில் நாட்டுப்புற ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.5,000 அளிக்கத் திட்டமிடப்படுகிறது. இதை அளிக்க அம்மாநிலத்தின் லலித்கலா அகாடமி உ.பி. அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
கரோனா பரவல் சூழலில் நாட்டுப்புறக் கலைஞர்கள் பலரும் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அப்பிரிவுகளின் நாட்டுப்புறக்கலை நலிவடைந்து மறையும் சூழல் நிலவுகிறது.
இதை காப்பாற்றும் முயற்சியில் உ.பி. மாநில லலித்கலா அகாடமி இறங்கியுள்ளது. இதற்காக சுமார் 40 வருட அனுபவம் கொண்ட ஓவியம் மற்றும் சிற்பத்தின் மூத்தக் கலைஞர்களுக்கு உதவித்தொகை அளிக்க முடிவு செய்துள்ளது.
மாதந்தோறும் ரூ.5,000 அளிக்கத் தனது உதவித்தொகைகளுக்கானச் சட்டதிட்டங்களை மாற்ற உள்ளது. இதற்காக, லலித்கலா அகாடமி சார்பில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசிடம் அனுமத் கோரப்பட்டுள்ளது.
முதல்வர் யோகி அரசும் இதற்கு சாதகமாக உள்ளார். எனவே, இந்த உதவித்தொகை திட்டம் வரும் ஆண்டு ஜனவரி முதல் அமலாகும் என எதிர்நோக்கப்படுகிறது.
சிற்பக் கலைஞர்களுக்கு மட்டும் அன்றி நாட்டுப்புறக் கலைகளில் ஆய்வு செய்யும் மாணவர்களுக்கும் ரூ.10,000 உதவித்தொகை மாதந்தோறும் அளிக்கவும் லலித் அகாடமி உ.பி.யில் அளிக்க உள்ளது.
இந்நிலையில், உ.பி.யின் அயோத்தியில் லலித்கலா அகாடமி சார்பில் ஒரு ஒவியக் கண்காட்சி நடத்த உள்ளது. டிசம்பர் 14 முதல் 18 தேதிகளிலான இக்கண்காட்சிக்கு ’சரயுவின் அலை சொல்வது என்ன?’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இக்கண்காட்சி தொடர்ந்து வாரணாசி, கான்பூர், லக்னோ மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய நகரங்களிலும் நடைபெற உள்ளன.
இதுவன்றி, வரும் டிசம்பர் 24 இன் முன்னாள் பிர்டஹமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டும் மதுராவில் ஒரு ஸ்ரீகிருஷ்ணாவின் பெயரிலும் லலித்கலா அகாடமி ஒரு கண்காட்சியை நடத்த உள்ளது.