Last Updated : 21 Oct, 2015 10:12 AM

 

Published : 21 Oct 2015 10:12 AM
Last Updated : 21 Oct 2015 10:12 AM

நாடு முழுவதும் வியாபாரிகள் பதுக்கிய 5,800 டன் பருப்பு பறிமுதல்: கர்நாடகாவில் ரூ 7.2 கோடி மதிப்புள்ள பருப்பு பறிமுதல் - விலை உயர்வை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,800 டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பருவமழை பொய்த்ததால் நடப்பாண்டில் பருப்பு வகைகளின் சாகுபடி கணிசமாகக் குறைந்துள்ளது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள சில மொத்த வியா பாரிகள் பருப்பை பதுக்கி அதிக லாபத் துக்கு விற்பதாக புகார்கள் எழுந் துள்ளன. இதனால் சந்தை யில் துவரம் பருப்பு, உளுத் தம் பருப்பு ஒரு கிலோ ரூ.210 வரை விற்கப்படுகிறது. இதர பருப்புகளின் விலை யும் வேகமாகஉயர்ந்து வருகிறது.

விலைஉயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. அண்மையில் 5 ஆயிரம் டன் பருப்பு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அவை மானிய விலையில் உள்நாட்டுச் சந்தையில் விற்கப்படுகின்றன. மேலும் கூடுதலாக 2 ஆயிரம் டன் பருப்பை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவைதவிர விவசாயிகளிடம் இருந்து நேரடியாக 40 ஆயிரம் டன் பருப்பை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனிடையே பருப்பு வகைகளை பதுக்குவோரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,800 டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் 2,549 டன், மத்திய பிரதேசத்தில் 2,295 டன், ஆந்திரப் பிரதேசத்தில் 600 டன், கர்நாடகத்தில் 360 டன், மகாராஷ்டி ராவில் 10 குவிண்டால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக நுகர்வோர் விவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவசர ஆலோசனை

இந்நிலையில் பருப்பு பதுக்கல், பயறுகள் கொள்முதல், உற்பத்தி, விலை நிலவரம் ஆகியவை குறித்து நுகர்வோர், வேளாண்துறை, வர்த்தகம் உள்ளிட்ட அமைச்சகங்களின் செயலர்களை மத்திய கேபினட் செயலாளர் டெல்லியில் நேற்று அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.

பருப்பு வகைகள் பதுக்கப்படுவதை தடுக்க மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப் பட்டது. டெல்லி உள்ளிட்ட மாநிலங் களில் இறக்குமதி செய்யப்பட்ட பருப்புகள் மானிய விலையில் விற்கப்படுவது எந்த அளவுக்கு விலையைக் குறைக்க உதவியுள்ளது என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு நுகர்வோர் விவகாரத் துறை செயலர் வி.விஸ்வநாத் நிருபர்களிடம் கூறிய தாவது:

பருப்பு விலையேற் றத்தைக் கட்டுப்படுத்த அத்தி யாவசிய பொருட்கள் சட்டத்தை மிகக் கடுமையாக அமல்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக சில மாநி லங்கள் திடீர் சோதனை நடத்தி பெருமளவு பருப்பு வகைகளை பறிமுதல் செய்துள்ளன. கர்நாடகாவில் மைசூரு, குல்பர்கா உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழகத்தில் சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பெரிய வியாபாரிகள் பருப்பு வகைகளை சேமித்து வைத்திருப் பதற்கான வரம்பு கணிசமாகக் குறைக் கப்பட்டிருக்கிறது. மேலும் வெளி நாடுகளில் இருந்து அதிக அளவில் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் பருப்பு விநியோகம் விரைவில் சீரடைவதுடன் விலையும் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கர்நாடகாவில் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 7.2 கோடி மதிப்பிலான பருப்பு வகைகளை மத்திய, மாநில‌ உணவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாட காவில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 80 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது. தற்போது துவரம் பருப்பின் விலை பன்மடங்கு அதிகரித்து, நேற்று கிலோவுக்கு ரூ.210 முதல் ரூ. 250 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து விலையேறி கொண்டிருக்கும் துவரம் பருப்பு, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளை வியாபாரிகள் கிடங்குகளில் பதுக்கி வைப்பதாக தகவல் வெளியானது.

எனவே கர்நாடக உணவுத்துறை அதிகாரிகள் நேற்று மைசூரு, குல்பர்கா ஆகிய இடங்களில் உள்ள கிடங்குகளில் பலத்த பாதுகாப்புடன் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 360 டன் எடையுள்ள‌ துவரம் பருப்பு, உளுந்து ஆகிய பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பருப்பின் மதிப்பு ரூ. 7.2 கோடி என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதுக்கல்காரர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x