

இந்த மண்டலக் காலத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலையில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேவசம்போர்டு தலைவர் வாசு கூறியது:
"தற்போது கரோனா பரவல் காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்த மண்டலக் காலத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஏற்கெனவே பலமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும் ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனத்திற்கு வருகின்றனர். இது தேவசம்போர்டின் கவனத்திற்கு வந்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, இதுபோன்று ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு வரும் பக்தர்களைத் திருப்பி அனுப்புவது தவிர வேறு வழியில்லை. இதனால் ஐயப்ப பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து மட்டுமே தரிசனத்திற்கு வரவேண்டும்!''
இவ்வாறு வாசு கூறினார்.
இதுதவிர சபரிமலையில் தங்கியுள்ள அனைவருக்கும் 14 நாட்களுக்கு ஒரு முறை கரோனா பரிசோதனை கட்டாயம் என சன்னிதானம் மாஜிஸ்திரேட் அறிவித்துள்ளார். கரோனா பரவல் காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு மட்டும் அல்லாமல் சபரிமலையில் பணிக்கு வந்துள்ள மற்றும் கடைகளில் பணிபுரியும் அனைவருக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்றிதழைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
கடந்த சில தினங்களாக சபரிமலையில் கோயில் ஊழியர்களுக்குக் கரோனா பரவுவது அதிகரித்து வருகிறது. இதையடுத்துக் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் பணியில் உள்ளவர்களும், கடைகள் மற்றும் ஓட்டல்களில் பணிபுரிபவர்களும் 14 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சன்னிதானம் நிர்வாக மாஜிஸ்திரேட் சத்யபாலன் நாயர் கூறியதாவது:
"சன்னிதானம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் 14 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கரோனா பரிசோதனை நடத்த வேண்டும். இது தொடர்பாக அனைத்துக் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் கிடைத்த இரண்டு நாட்களுக்குள் அனைத்து ஊழியர்களும் கரோனா பரிசோதனை நடத்தி சான்றிதழைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
கடைகள் மற்றும் நிறுவனங்களில் சோதனைக்கு வரும் அதிகாரியிடம் அந்தச் சான்றிதழைக் காண்பிக்க வேண்டும். 14 நாட்கள் மட்டுமே காலாவதி உள்ள கரோனா பரிசோதனை சான்றிதழ் கைவசம் இல்லாவிட்டால் அவர்கள் சபரிமலையில் தொடர அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதைப் பின்பற்றாதவர்கள் கண்டிப்பாக சபரிமலையில் இருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள்".
இவ்வாறு மாஜிஸ்திரேட் சத்யபாலன் நாயர் தெரிவித்துள்ளார்.
மேற்சொன்ன தகவல்களை கேரள அரசின் செய்தி தகவல் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது.