

மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்கத் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை மதுரா மாவட்ட நீதிமன்றம் ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் புதிய வழக்குத் தொடரப்பட்டது. கிருஷ்ண ஜென்ம பூமியின் 13.37 ஏக்கர் நில உரிமையைக் கோரியும், கிருஷ்ண ஜென்ம பூமியை ஒட்டியுள்ள ஷாயி ஈத்கா மசூதியை அகற்றக் கோரியும் இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
கி.பி. 1669-70ஆம் ஆண்டில் மதுரா நகரில் கத்ரா கேசவ் தேவ் என்ற இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பிடத்தில் கட்டப்பட்ட ஒரு கிருஷ்ணர் கோயிலை இடித்து அந்த இடத்தில் ஈத்கா மசூதியைக் கட்டியதாக முகலாய ஆட்சியாளர் அவுரங்கசீப் மீது வழக்குத் தொடர்வதாகவும் மனுவில் கூறப்பட்டது.
செப்டம்பர் 30 அன்று, மதுரா சிவில் நீதிமன்றம், கிருஷ்ண ஜென்ம பூமியில் கட்டப்பட்ட மசூதியை அகற்றுவதற்காக வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் தாக்கல் செய்த வழக்கை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டது. சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் 1991இன் கீழ் ஒரு பகுதியை மேற்கோளிட்டு, சிவில் நீதிமன்றம் இம்மனுவைத் தள்ளுபடி செய்தது.
கிருஷ்ண ஜென்ம பூமியை ஒட்டியுள்ள மசூதியை அகற்றக் கோரிய மனுவை மதுரா சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மனுதாரர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதனையடுத்து மேல்முறையீட்டு மனுவை அக்டோபர் 16-ம் தேதி மாவட்ட நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
மாவட்ட நீதிபதி சாத்னா ராணி தாக்கூர் இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்திற்கு வராதநிலையில், இதன் மீதான விசாரணை வரும் ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.