

டெல்லியில் எழுப்பப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் இந்திய ஜனநாயகத்தில் மைல்கல்லாக அமையும். பழைய நாடாளுமன்றக் கட்டிடம் சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவுக்கு வழிகாட்டினால், புதிய கட்டிடம், தற்சார்பு இந்தியாவுக்கு அடையாளமாக அமையும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தற்போதுள்ள நாடாளுமன்றம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. தரைதளம் மட்டும் 16,921 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது.
இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் 900 முதல் 1200 எம்.பி.க்கள் வரை அமரலாம். புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று டெல்லியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஸ், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பிரஹலாத் ஜோஷி, மத்திய அமைச்சரவையில் மூத்த அதிகாரிகள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீருங்கேரி மடத்தின் சார்பில் மதகுருக்கள் வந்திருந்து பூஜை நடத்தினர்.
இந்தப் பூஜை முடிந்தபின் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
''பழைய நாடாளுமன்றக் கட்டிடம் சுதந்திரத்துக்குப் பின் நமக்கு வழிகாட்டியது என்றால் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தற்சார்பு இந்தியாவை நோக்கிச் செல்ல வழிகாட்டும்.
இந்திய ஜனநாயகத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் மைல்கல்லாக அமையும். இன்றைய நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். 21-ம் நூற்றாண்டின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக புதிய நாடாளுமன்றம் அமையும். புதியவை மற்றும் தொன்மையை ஒருங்கிணைப்பதாக புதிய நாடாளுமன்றம் இருக்கும். வேகமான மாற்றத்தையும், சூழலுக்கு ஏற்ப மாற்றத்தைத் தகவமைத்துக் கொள்வதையும் பிரதிபலிப்பதாக அமையும்.
தற்போதுள்ள நாடாளுமன்றத்தில்தான் நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு, நம்மிடம் வழங்கப்பட்டது. நமது ஜனநாயகத்தின் களஞ்சியமாக நாடாளுமன்றம் இருந்து வருகிறது. அதை நனவாக்குவதும் முக்கியமாகும்.
இந்தக் கட்டிடத்துக்கு ஓய்வு தேவைப்படும் அளவுக்கு, கடந்த 100 ஆண்டுகளாகப் பல்வேறு மாற்றங்கள் இந்தப் பழைய நாடாளுமன்றத்தில் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே புதிய நாடாளுமன்றம் கட்டும் முடிவு எடுக்கப்பட்டது.
நாம் இந்த தேசத்து மக்கள். அனைவரும் சேர்ந்து புதிய நாடாளுமன்றத்தை எழுப்புவோம். இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, இந்தப் புதிய கட்டிடம் உத்வேகமாக இருக்கும். கடந்த 2014-ல் இந்த நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பை, அந்தத் தருணத்தை நான் ஒருபோதும் மறக்க முடியாது. இந்த நாடாளுமன்றத்துக்குள் நுழையும் முன் ஜனநாயகத்தின் கோயிலை தலைவணங்கத்தான் உள்ளே சென்றேன்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.