ஜே.பி.நட்டாவுக்குப் பாதுகாப்பில் குறைபாடு: மேற்கு வங்க அரசிடம் உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்பு
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, பாதுகாப்புக் குறைபாடு நடந்தது தொடர்பாக மேற்கு வங்க அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்கத்துக்கு நேற்று வந்தார். கொல்கத்தாவிலிருந்து டைமண்ட் ஹார்பர் தொகுதிக்குச் சென்றபோது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நட்டாவின் பாதுகாப்பு வாகனத்தின் மீது இன்று தாக்குதல் நடத்தினர் என்று பாஜக சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், பாஜக மூத்த தலைவர் விஜய் வர்கியாவும் தாக்குதலில் காயமடைந்தார் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நேற்று கடிதம் எழுதினார்.
அதில், “கொல்கத்தாவில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் முன் 200க்கும் மேற்பட்டவர்கள் கம்புகளுடனும், மூங்கில் கட்டைகளுடனும், கொடிகளுடன் போராட்டம் நடத்தினார்கள்.
கட்சியின் அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தியிருந்த காரில் சிலர் ஏறி அமர்ந்து கூச்சலிட்டனர். இதைப் பார்த்த போலீஸார் அவர்களைத் தடுக்கவில்லை. அவர்களை நட்டாவின் காரின் அருகே வருவதற்கு போலீஸார் அனுமதித்தனர்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விஷயத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. பாதுகாப்பில் மாநில போலீஸார் கவனக்குறைவுடன் செயல்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, நட்டாவுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டதில் என்னவிதமான குறைபாடு நடந்துள்ளது, நடந்த சம்பவங்கள் என்னென்ன, பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, கற்களை எறிந்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மேற்கு வங்க அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.
