

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சென்ற வாகனம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதன் மூலம் மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் சவப்பெட்டியின் கடைசி ஆணி அடிக்கப்பட்டு விட்டது என மத்திய பிரதேச மாநில முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இன்று சென்றார்.
டைமண்ட் ஹார்பருக்குச் செல்லும் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டு, கார் கண்ணாடி மீது கற்கள் வீசப்பட்டன. இதில் பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்க்கியா காயமடைந்தார் என்று பாஜக வட்டாரங்களும், நேரில் பார்த்தவர்களும் தெரிவித்தனர்.
முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜிதான் டைமண்ட் ஹார்பர் தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இந்த தாக்குதல் சம்பவத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் மத்திய பிரதேச மாநில முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:
‘‘பாஜக தலைவர் நட்டா சென்ற வாகனம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதன் மூலம் மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் சவப்பெட்டியின் கடைசி ஆணி அடிக்கப்பட்டு விட்டது. மேற்குவங்கமோ அல்லது இந்த நாடோ இதுபோன்ற சம்பவங்களை சகித்துக் கொள்ள முடியாது. தோல்வி பயத்தால் மம்தா பானர்ஜி இதுபோன்ற தாக்குதல்களை ஊக்குவிக்கிறார். பாஜகவை யாராலும் பயமுறுத்த முடியாது.’’ எனக் கூறினார்.