

புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதை தவிர்க்க முடியாது என மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ரோனன் சென் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கான இந்திய தூதராகவும் பணிபுரிந்த அவர், 'தி இந்து'வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு பல நாட்டு அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது குறித்து தங்கள் கருத்து...
நம் நாடு சுதந்திரம் பெற்ற பின் முதன்முறையாக இதுபோன்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த நாட்டின் அதிபர் பதவி ஏற்பிலும் இதுபோல் மற்ற நாடுகளின் அதிபர்களுக்கு அழைப்பு விடப்பட்டது இல்லை. இதன் நோக்கம் பிரதமர் பதவியின் முக்கியத்துவத்தை அதிகப் படுத்துவதாக இருக்கலாம். இதுபோல் வேறு என்ன காரணம் என்பதை, அதை முடிவு செய்தவர் கள்தான் சொல்ல வேண்டும்.
ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்காமல் இருந்திருக்க முடியாதா?
ராஜபக்சே, சார்க் நாடுகளின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டு விட்டதால், அவருக்கு அழைப்பு விடுக்காமல் இருக்கவே முடியாது. அவரது வரவை புதிய பிரதமர் பதவி ஏற்பு விழாவில் தவிர்க்க முடியாது. ஒருவேளை நம் அண்டை நாடுகளுக்கு மட்டுமான அழைப்பு என்றாலும் ராஜபக்சேவை தவிர்க்க முடியாது. இதில் அவரை தவிர்த்தால், சீனா போன்ற நாடுகளுடன் இலங்கை தன் நெருக் கத்தை வளர்த்துக் கொள்ளும்.
ராஜபக்சேவை அழைத்ததன் மூலம் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை புதிதாக அமையும் அரசு கவனத்தில் கொள்ளவில்லை எனக் கூற முடியுமா?
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் தமிழகத்து மக்களின் உணர்வுகள் கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால் இந்த விஷயத்தில் அதைச் செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஏனெனில், சார்க் நாடுகளின் அதிபர்களுக்கு அழைப்பு விடுப்பது என்பது அடுத்து ஆட்சி அமைக்கவிருக்கும் கட்சியான பாஜகவின் கொள்கை முடிவாக உள்ளது. இதில் நம் எதிரிநாடாகக் கருதப்படும் பாகிஸ்தான், ஊடுருவல் உட்பட பல பிரச்சினைகளுக்காக பாஜகவின் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதில் இலங்கையை மட்டும் புறக்கணிப்பது என்பது சாத்தியமாகாது.
இதற்காக, சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கும் முடிவை எடுக்காமல் இருந்திருக்கலாமே?
இந்த விஷயத்தை அவ்வளவு ஆழமாக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், இது ஒரு சடங்கு போன்ற பதவி ஏற்பு விழா மட்டுமே. இதில், எந்தவிதமான முக்கியப் பேச்சுவார்த்தையோ புதிய ஒப்பந்தங்களோ போடப் போவதில்லை. மாறாக, இந்த விழாவின் பெயரிலான சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு நல்லெண்ணத்தை வளர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதனால், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் நியாயம் இல்லை என்கிறீர்களா?
நான் அப்படிச் சொல்லவில்லை. 2007-ல் இலங்கை படுகொலைகள் நடந்தபோது உலகம் முழுவதும் அமைதி நிலவியது. அப்போது அங்கு நடந்த படுகொலைகள் மீதான கண்டிப்புகள் எழவில்லையே...
நம் நாட்டின் ஒரு சிறிய பகுதியில் சிறிய மாநிலமான தமிழகத்தின் பிரச்சினை இது எனக் கருதி பாஜகவினர் கருத்தில் கொள்ளாமல் இருந்து விட்டார்களா?
எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் மூலை, முடுக்கில் நடக்கும் பிரச்சினைகளும் கண்டிப்பாகக் கருத்தில் கொள்ளப்படும். இலங்கை யின் வட மாகாணத்தில் ஒரு தமிழர் முதல்வராக தேர்தெடுக்கப்பட்ட போது அங்குள்ளவர்கள் நம் பிரதமருக்கு அழைப்பு விடுத்தனர். அங்கு பிரதமர் செல்லாமல் இருந் தது, வட மகாணத்தின் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் போனதாக ஆகாதா? எனவே, ஒரு நாடு என்பது, அதன் அரசியல் பிரச்சினை, கொள்கைகள், நாட்டின் அமைதி, கவுரவம் எனப் பலவற்றையும் கொண்டது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ஜெய வர்தனாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்திலும் அனைவரும் திருப்தியாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதில், இலங்கையினரும் கூட முழு திருப்தி அடையவில்லை (இதன் விளைவாகத்தான் சிங்கள சிப்பாய் ஒருவன், ராஜீவ் காந்தியை துப்பாக்கியின் பின்பகுதியால் தாக்க முயன்றான்).
இந்த விழாவின் பலனாக நம் நாட்டிற்கு கிடைக்கப்போவது என்னவாக இருக்கும்?
இவர்களை பிரதமராகும் மோடி எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை பொறுத்தது.