நாடாளுமன்ற புதிய கட்டிடம்; அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

நாடாளுமன்ற புதிய கட்டிடம்; அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
Updated on
2 min read

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

டெல்லியில் நாடாளுமன்றம் செயல்பட்டு வரும் தற்போதைய கட்டிடம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது.

இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.

இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் 900 முதல் 1200 எம்.பி.க்கள் வரை அமரலாம். புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும்.

இந்நிலையில் மத்திய அரசின் விஸ்டா திட்டத்துக்கு எதிராகப் பல்வேறு கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான மத்திய அரசின் மத்திய விஸ்டா திட்டத்துக்கு எந்தவிதமான தடையும் இல்லை, வரும் 10-ம் தேதி புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு அனுமதியளித்தது.

மத்திய விஸ்டா திட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான முடிவை எடுக்கும் வரை, எந்தவிதமான கட்டுமானத்தையும் இடிக்கமாட்டோம். கட்டுமானம் ஏதும் கட்டப்படாது என்று மத்திய அரசு உறுதியளித்தபின் இந்த அனுமதி அளிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்று புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

நிகழ்ச்சியில் டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா, ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in