

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேயின் தாயாரிடம் இருந்து ரூ.2.50 கோடியை ஏமாற்றிய உதவியாளரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து நாக்பூர் காவல் ஆணையர் அமிதேஷ் குமார் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேயின் தாயார் முக்தா பாப்டே. இவருக்கு நாக்பூரில் ஆகாஷ்வானி சதுக்கம் அருகே மிகப்பெரிய மண்டபம் , காலிமனைஇருக்கிறது. இந்த மண்டம் மற்றும் காலிமனையை திருமணம், விஷேசங்களுக்கு வாடகைக்கு விட்டு முக்தா பாப்டே பணம் ஈட்டி வருகிறார்.
முதுமை, உடல்நலக் கோளாறு காரணமாக அவரால் வேகமாகச் செயல்பட முடியவில்லை என்பதால், தபாஸ் கோஷ்(வயது49) என்பவரை அந்த சொத்துக்களை கண்காணிப்வராக கடந்த 2007-ல் முக்தா பாப்டே நியமித்தார். திருமண மண்டபம் முன்பதிவு அடிப்படையில் அவருக்கு ஊதியமும், கமிஷனும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து முக்தா பாப்டேயின் வங்கிக்கணக்கில் போதுமான வாடகை பணத்தை தபாஸ் கோஷும் அவரின் மனைவியும் டெபாசிட் செய்யவி்ல்லை. இதுகுறித்து முக்தா பாப்டே கேள்வி எழுப்பியபோது, இடம் புக்கிங் ஆகவில்லை உள்ளிட்ட ஏதாவது காரணங்களைக் கூறி சமாளித்து வந்தனர்.
இதில் கரோனா காலத்தில் ஏராளமானோர் மண்டத்தை முன்பதிவு செய்திருந்தனர். இடத்தையும் வாடகைக்குப் பேசியிருந்தனர். ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பால் யாரும் விஷேசங்களை நடத்தவில்லை. அந்த முன்பதிவு பணத்தையும் தபாஸ் கோஷ் முன்பதிவு செய்தவர்களுக்கு வழங்காமல் ஏமாற்றியுள்ளார்.
இதையடுத்து, கடந்தஆகஸ்ட் மாதம் முக்தா பாப்டே இது தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸிடம் தபாஸ் கோஷ் குறித்து புகார் அளித்தார். இந்தப் புகாரையடுத்து, போலீஸ் துணை ஆணையர் வினிதா சாஹு தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.
இந்த விசாரணையில் கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து முக்தா பாப்டேவை, தபாஸ் கோஷ் ஏமாற்றியது தெரியவந்தது. அவரின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தாமல் பல்வேறு போலிக் கணக்குகளை காட்டி தபாஸ் கோஷும் அவரின் மனைவியும் ஏமாற்றியதும், போலி பில்கள்அச்சடித்து வினியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தவகையில் தபாஸ் கோஷ் அவரின் மனைவியும் சேர்ந்து ஏறக்குறைய. ரூ.2.50 கோடி முக்தா பாப்டேயிடம் இருந்து ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து, சீதாபல்த் காவல் நிலையத்தில் ஐசிபி பிரிவு 409, 420, 467 ஆகிய பிரிவுகள் மீது கோஷ் மற்றும் அவரின் மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறப்பு விசாரணைப்படை தீவிரமாகத் தேடி வந்த நிலையில் செவ்வாய்கிழமை இரவு கோஷ், அவரின் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டநிலையில் வரும் 16-ம் தேதிவரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி அனுமதியளித்துள்ளார்
இவ்வாறு அமிதேஷ் குமார் தெரிவித்தார்.