

சிறையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் உட்பட சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொச்சியில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (பொருளாதார குற்றப்பிரிவு) ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
சிறைச்சாலையில் எனக்கு மிரட்டல்கள் விடப்பட்டன. அதிக செல்வாக்குள்ள நபர்களால் சிறை வளாகத்துக்குள் எனது உயிருக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். முக்கிய அரசியல்வாதிகளின் பெயர்களை கூறக்கூடாது என அதிகாரிகள் என்னிடம் சிறையில் தெரிவித்தனர். விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைக்க கூடாது என்றும் என்னிடம் கூறினர். அப்படி இல்லையென்றால் என்னுடைய குடும்பத்துக்கு தீங்கு நேரிடும் என்றும் மிரட்டல் விடப்பட்டது. எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஸ்வப்னாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநில டிஜிபி (சிறைத்துறை), சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்த விஷயங்கள் குறித்து என்ஐஏ, அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலர் சி.எம். ரவீந்திரனுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
காங்கிரஸ் கோரிக்கை
இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயன், பேரவைத் தலைவர் பி.ராமகிருஷ்ணன் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.