

ஹரியாணா மாநிலத்தில், புறா திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட தலித் சிறுவன் மர்மமான முறையில் மரணமடைந்தான். அச்சிறுவன் தற்கொலை செய்து கொண்டான் என்று முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
ஹரியாணா மாநிலம் சோன்பட் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்த் (15) என்ற தலித் சிறுவன் மீது மற்றொரு வகுப்பைச் சேர்ந்தவர்களின் வீட்டுக்குள் புகுந்து புறா திருடியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக காவல் துறையினர் அச்சிறுவனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் அச்சிறுவன் தனது வீட்டருகே தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடைத்தான். காவல் துறையினர் சிறுவனை அடித்துக் கொன்றுவிட்டதாக சிறுவனின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் இரு தலித் சிறுவர்கள் இறந்த நிலையில், மேலும் ஒரு சிறுவன் மர்மமான முறையில் இறந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே அச்சிறுவன் தற்கொலை செய்துகொண்டதாக முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பணப்பிரச்சினை காரணமாக இது நிகழ்ந்துள்ளது. காடியா லோஹர் மற்றும் தானிக் குடும்பத்திடையே ரூ.6,000 மற்றும் புறா தொடர்பான பிரச்சினை இருந்துள்ளது. இப்பிரச்சினை காவல் நிலையத்துக்குச் சென்ற போது, இருதரப்பினரும் பணத்தை சமமாக பங்கிட்டுக் கொள்வது எனக் கூறி சுமுகமாக பேசி முடித்துக் கொண்டனர். ஒரு தரப்பினர் பணம் கொடுத்துவிட்ட நிலையில் மற்றொரு குடும்பம் தரவில்லை. சிறுவனை காவலர்கள் அழைத்து விசாரிக்கவில்லை. அவனாக காவல் நிலையம் சென்றுள்ளான்.
ஒரு குடும்பம் புகாருடன் சென்றுள்ளது. அப்பொழுது பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பினர். வியாழக்கிழமை இரவு அச்சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான். அச்சிறுவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும். மேலும் இழப்பீடும் வழங்கப்படும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாகவே பராமரிக்கப்படுகிறது. சிறிய தனிப்பட்ட விஷயங்களுக்கு சாதிச்சாயம் பூசுவது தவறான ஒன்று. எதிர்க்கட்சிகள் தேவையின்றி பிரச்சினையை பெரிதாக்குகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.