

மத்தியில் அடுத்து அமையக் கூடிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஊழல் ஒழிப்புக்கு விடை காண்பதாக இருக்கும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஊழல் என்பது இனி கடந்த கால விவகாரமாகி விடும். அதை ஒழிப்பதற்கான சில ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது. அடுத்து மத்தியில் அமையக் கூடிய காங்கிரஸ் கூட்டணி அரசு ஊழல் பிரச்சினைக்கு முடிவு காணக் கூடியதாக இருக்கும். இதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
ஊழல் நாம் விரும்பி நடப்பதில்லை. பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் நாட்டில் அவ்வளவு எளிதில் ஊழலை ஒழித்துவிட முடியாது. நாட்டின் எல்லா தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகள், தேவைகளுக்கு விடை காணக் கூடியது காங்கிரஸ் அரசு மட்டுமே. அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைக்கும் சித்தாந்தம் மூலமாக இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக திட்டமிட்டு பொய்த் தகவல்களை பரப்புகிறார்கள். பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்த சாதனைகளை விட காங்கிரஸ் கூட்டணி அரசின் சாதனைகள் எல்லா வகையிலும் மிகவும் உயர்ந்தவை.
எனது பதவிக்காலம் பற்றி பாஜக கடுமையாக குறை சொல்கிறது. நான் பலவீனமானவன் என்றும் ஓடிவிடுவேன் என்றும் நினைத்து தாக்கிப் பேசியது; அவற்றை பொய்யாக்கிவிட்டேன்.
அனைவருக்கும் பலன் தரக்கூடிய முன்னேற்றம் காண்பதற்கு வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமே போதுமானதாகாது. இதற்கு மகளிர், எஸ்.சி., எஸ்.டி.கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தேவைகள், கல்வி, சுகாதாரப் பராமரிப்பை பூர்த்தி செய்ய வழி காண்பது அவசியமாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சி கண்டது. இந்நிலையில் இப்போது புதிதாக மோடி வளர்ச்சி திட்டம் என ஒன்று எங்கும் பேசப்படுகிறது. காங்கிரஸ் கையாளும் வளர்ச்சித் திட்டம்தான் எல்லா கவலைகளுக்கும் பதில் சொல்லக் கூடியது.
தொழில்துறை, வேளாண் துறையில் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு ஆகியவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளாகும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
வெற்றிபெறுவோம்: சோனியா
தேர்தல் அறிக்கையை வெளியிட்டபிறகு நிருபர்களிடம் பேசிய சோனியா காந்தி கூறியதாவது: தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து நல்ல வேட்பாளரை நிறுத்துவோம்,
2014ம் ஆண்டு தேர்தல், திட்டங்கள், கொள்கைகள், திட்டமிடல், பொருளாதார மேம்பாடு பற்றியது மட்டும் அல்ல. நமது சுதந்திரப் போராட்ட தியாகிகளின் லட்சியக் கனவின்படி நாட்டின் அரசமைப்பை கட்டிக் காப்பதற்கானதாகும். இந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டி யிடுவது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காகும் என்றார் சோனியா காந்தி.