

ஆதார் அட்டை திட்ட இயக்குநரும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவருமான நந்தன் நிலகேனி காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியது: “சமீபகாலமாக எனக்கு அரசியல் மீது மிகுந்த நம்பிக்கையும் ஆர்வமும் ஏற்பட்டிருக்கிறது. அரசியலின் மூலம்தான் நாட்டில் சில நல்ல மாற்றங்களை செய்ய முடியும் என உறுதியாக நம்புகிறேன். எனது அரசியல் விருப்பத்தை காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரிடம் தெரிவித்துள்ளேன். எனக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் நிச்சயம் பெங்களூரில் போட்டியிடுவேன். ஏனென்றால் நாட்டுக்கும் மக்களுக்கும் நிறைய நல்ல மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்'' என்றார்.