

வேளாண் சட்டங்களை முழுமையாக நீக்கும்வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசு கடந்த செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப் பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடும் எட்டப்படவில்லை.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி இன்று (8-ம் தேதி) விவசாயிகள் பாரத் பந்த் அதாவது நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடந்தது.
இந்த வேலை நிறுத்தத்திற்கு டிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சிவசேனா, திமுக, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
விவசாயிகள் அமைப்பினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று மாலை சந்தித்தனர். அப்போது விவசாயிகள் போராட்டத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், போக்குவரத்து பாதிப்பை நீக்கவும் ஒத்துழைக்குமாறு விவசாய சங்க பிரதிநிதிகளிடம் அமித் ஷா வலியுறுத்தினார். மேலும் வேளாண்ட சட்டத்தில் திருத்தங்கள் செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
இந்நிலையில் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இன்று நடைபெற இருந்த 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரவும் சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்யவும் மத்திய அரசு முன்வந்துள்ளது.
இதனை எழுத்து பூர்வமாக தருவதற்கு தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வேளாண் சட்டங்களை முழுமையாக நீக்கும்வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.