இந்தியாவில் தயாராகும் 8 கரோனா தடுப்பூசிகள்; முதலில் முன்கள சுகாதாரப் பணியாளர்கள் 1 கோடி பேருக்கு முன்னுரிமை: மத்திய அரசு

இந்தியாவில் தயாராகும் 8 கரோனா தடுப்பூசிகள்; முதலில் முன்கள சுகாதாரப் பணியாளர்கள் 1 கோடி பேருக்கு முன்னுரிமை: மத்திய அரசு
Updated on
2 min read

உலகை அச்சுறுத்தும் கோவிட்-19 நோய்க்கு உலக நாடுகள் பல தடுப்பூசி தயாரித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் 8 மருந்து நிறுவனங்கள் கரோனா தடுப்பூசிகளைத் தயாரித்து வருவதாக சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய ராஜேஷ் பூஷண், "கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் அரசாங்கம் விதித்துள்ள விதிமுறைகளின் படி மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய சூழலில் இந்தியாவில் 8 மருந்து நிறுவனங்கள் கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணியில் உள்ளன.

முதலாவதாக, புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு மூன்றாம் கட்டப் பரிசோதனையில் உள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ரா ஜெனிக்கா மருந்து நிறுவனம் இணைந்து இந்தப் பரிசோதனையில் உள்ளது.

இரண்டாவதாக, பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து கோவேக்ஸின் தடுப்பூசியை சோதனை செய்து வருகிறது.

மூன்றாவதாக, கேடிலா ஹெல்த் கேர் நிறுவனம் ZyCoV-D என்ற தடுப்பூசியை இந்திய பயோடெக்னாலஜி துறையுடன் இணைந்து தயாரித்து வருகிறது. இது இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது.

4-வதாக, டாக்டர் ரெட்டிஸ் லேப், ரஷ்யாவின் கெமேலியா தேசிய மையத்துடன் இணைந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிப்பில் உள்ளது. இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை அடுத்த வாரம் தொடங்குகிறது.

5-வதாக, புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நோவாவேக்ஸுடன் இணைந்து NVX-CoV2373 என்ற தடுப்பூசியைத் தயாரித்து வருகிறது.

6-வதாக, ஹைதராபாத்தின் பயோலாஜிக்கல் இ லிமிடெட் MIT-USA நிறுவனத்துடன் இணைந்து ரீகாம்பினன்ட் ப்ரோட்டீன் ஆன்டிஜன் தடுப்பூசி தயாரித்து வருகிறது. இது முதற்கட்டப் பரிசோதனையில் உள்ளது.

ஏழாவதாக, ஜீனோவா நிறுவனம் அமெரிக்காவின் HDT-நிறுவனத்துடன் இணைந்து HGCO 19 என்ற தடுப்பூசியைத் தயாரித்து வருகிறது. இது ஆரம்பக்கட்டப் பரிசோதனையில் உள்ளது.

8-வதாக, ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவின் தாமஸ் ஜெஃபர்சன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயார் செய்யும் தடுப்பூசி தயாரிப்பு ஆரம்ப நிலையில் உள்ளது.

பல்வேறு தடுப்பூசிகளும் பல்வேறு பரிசோதனை படிநிலைகளில் இருக்க இவற்றுக்கான அனுமதி அடுத்த சில வாரங்களில் வழங்கப்படலாம். எந்தத் தடுப்பூசியாக இருந்தாலும் 3 அல்லது 4 வார இடைவெளியில் 2 அல்லது 3 தவணையில் வழங்கப்பட வேண்டியிருக்கும்" என்றார்.

யாருக்கு முன்னுரிமை:

தடுப்பூசி வழங்குவதில் அரசாங்கம் ஐந்து முக்கிய விதிகளைப் பின்பற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார். அதன்படி, நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி வழங்கும் பணி ஒரு வருடத்திற்கோ அதையும் தாண்டி சில மாதங்களுக்கோ நடைபெறும்.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சுகாதார சேவைகளில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படும்.

சர்வதேச தடுப்பூசித் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள மக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

முதற்கட்டமாக 1 கோடி முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். பின்னர், மத்திய, மாநில காவல்துறை, ஆயுதப் படை வீரர்கள், ஊர்க்காவல் படையினர், ராணுவத்தினர், பேரிடர் மேலாண்மை தன்னார்வலர்கள், முனிசிபல் ஊழியர்கள் உள்ளடக்கிய 2 கோடி பேர், அடுத்ததாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் கொண்டோர் உள்ளடக்கிய 27 கோடி பேர் என்ற வரிசையில் தடுப்பூசி வழங்கப்படும்.

இவர்கள் தவிர யாருக்கெல்லாம் தடுப்பூசி அவசியமாகிறதோ அவர்களுக்கெல்லாம் நிச்சயமாக வழங்கப்படும்.

முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கே முதல் முன்னுரிமை என்பதால் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்கள் சார்பில் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in