Published : 09 Dec 2020 03:14 AM
Last Updated : 09 Dec 2020 03:14 AM

அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க விசா வாங்கி தருவதாக மோசடி: ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியைத் தேடும் போலீஸார்

அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க விசா வாங்கித் தருவதாகக் கூறி சுமார் ரூ.10 கோடிக்கும் மேல் மாணவர்களிடம் மோசடி செய்ததாக ஆந்திராவைச் சேர்ந்த இளம் தம்பதியை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில், இவரது மனைவி பிரணிதா. இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் விசா ஏஜென்சி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் சேர்ந்து மேற்படிப்பு படிக்க விசாவாங்கித் தருவதாகக் கூறி ஆந்திரா, தெலங்கானா, தமிழகம்,மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறுமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர்.

இதற்காக ஒரு மாணவரிடம் ரூ.18.5 லட்சம் வீதம் இதுவரை ரூ.10 கோடிக்கும் மேல் இவர்கள் வாங்கியுள்ளனர். ஆனால் சொன்னபடி விசா பெற்றுத் தராமல் மோசடிசெய்ததாக இவர்கள் மீது அட்லாண்டா பாதுகாப்பு பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்துள்ளனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் அங்குள்ள போலீஸார் வழக்கு பதிவு செய்து சுனில் மற்றும் பிரணிதாவை விசாரிக்க அவர்கள் இருப்பிடம் தேடிச் சென்றனர்.ஆனால் அவர்கள் இருவரும் ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே ஆந்திராவிலுள்ள சுனிலின் தந்தை சத்யநாராயணா பெயரில் ரூ.1 கோடி அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனால் இதுகுறித்து ஆந்திர போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மேற்கு கோதாவரி மாவட்ட போலீஸார் சுனிலின் தந்தை சத்யநாராயணா வீட்டுக்குச் சென்றனர். ஆனால் அவரும் வீட்டைப் பூட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க போலீஸாரும், ஆந்திர போலீஸாரும் தலைமறைவாக உள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x