Published : 09 Dec 2020 03:14 AM
Last Updated : 09 Dec 2020 03:14 AM

நிதி பற்றாக்குறை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை; பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இலக்கு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

‘‘நிதிப்பற்றாக்குறை இலக்கு எட்ட முடியாமல் போவது குறித்து மத்தியஅரசு கவலைப்படவில்லை. தற்போதைய நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமே இலக்கு’’ என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மானிய உதவிகள் மற்றும் சலுகைகள் அளிப்பதை அரசு உடனடியாக நிறுத்த விரும்பவில்லை என்று ஒரு நேர்காணலில் நிர்மலாசீதாராமன் பதிலளித்துள்ளார். மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும்ஒன்றிணைந்து சரியான விகிதத்தில் நிதி நிலையை கையாண்டு வருகிறது என்று குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் நிதிப் பற்றாக்குறை குறித்து தான் கவலைப்படவில்லை என்றும், நிதித் தேவைஇருக்கும் போது, பணம் செலவிடவேண்டியது அவசியம் என்றும்அவர் கூறினார்.

மத்திய அரசு அறிவித்த மானியசலுகைகள், உதவித் திட்டங்கள்எந்த வகையில் செயல்படுத்தப்படுகிறது என்பதை 15 தினங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கரோனா பாதிப்பு காரணமாக செயல்படுத்தப்பட்ட ஊரடங்கால் முடங்கிய தொழில் துறைகள் மீண்டும் செயல்பட வசதியாக ரூ.30 லட்சம் கோடி சலுகைத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

சலுகைகள் மற்றும் மானிய உதவிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதால் நிதிப் பற்றாக்குறை 8 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்று நிதித்துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர். இது அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்கைவிட (3.5 சதவீதம்) இரு மடங்குக்கும் அதிகமாகும்.

பற்றாக்குறை குறித்து அரசு கவலைப்படவில்லை என நிதி அமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. கடன் பத்திரங்களின் மதிப்பும் ஸ்திரமாக உயர்ந்தன. அதேபோல டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 0.1% அதிகரித்தது.

வரும் ஆண்டுகளில் நாட்டின் நிதி நிலை குறித்து தொடர்ந்து மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம். பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், உடனடியாக செலவினங்களைக் குறைக்க ஒரு போதும் நினைக்கவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், பொருளாதாரம் முன்னேறும் வகையிலான அறிகுறிகள் தென்படும் வரை சலுகைகள் தொடரும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x