ஸ்ரீநகர் இல்லத்தில் சட்டவிரோதமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

வீட்டுக் காவலில் இருக்கும் போலீஸாரிடம் கதவைத் திறக்கக் கோரும் மெகபூபா முப்தி : படம் உதவி | ட்விட்டர்.
வீட்டுக் காவலில் இருக்கும் போலீஸாரிடம் கதவைத் திறக்கக் கோரும் மெகபூபா முப்தி : படம் உதவி | ட்விட்டர்.
Updated on
1 min read

ஸ்ரீநகரில் உள்ள எனது இல்லத்தில் சட்டவிரோதமாக நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். என்னை வெளியே விடுவதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் சமீபத்தில் ரோஷினி சட்டத்தை ரத்து செய்ததையடுத்து, வீடுகளையும் நிலங்களையும் இழந்த மக்கள் பட்காம் பகுதியில் உள்ளனர். அவர்களைச் சந்தித்து மெகபூபா முப்தி ஆறுதல் கூற இன்று திட்டமிட்டு இருந்தார். ஆனால், திடீரென மெகபூபாவை அவரின் இல்லத்தில் இருந்து வெளியே வரவிடாமல் பூட்டிவிட்டனர்.

இது தொடர்பாக மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டு, வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், “எதிர்க்கட்சியினரை எந்த வழியிலாவது அடக்கிவைக்க இந்திய அரசு தற்போது சட்டவிரோதக் காவலை விரும்பித் தேர்வு செய்கிறது.

நான் மீண்டும் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். பட்காமில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் நிலங்களில் இருந்தும், வீடுகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளதால், அவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டு இருந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் மெகபூபா முப்தி பதிவிட்ட கருத்தில், “ஜம்மு காஷ்மீர் மக்கள் எந்தவிதமான கேள்வியும் கேட்காத வகையில் தொடர்ந்து அவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மெகபூபா முப்தி பதிவிட்ட வீடியோவில், வாசற்கதவின் அருகே செல்லும் அவர், காவலில் இருக்கும் போலீஸாரிடம் கதவைத் திறங்கள் எனக் கேட்கிறார். “கதவைத் திறங்கள். நான் வெளியே செல்ல வேண்டும். என்னிடம் ஆவணங்களைக் காட்டுங்கள்,

எந்தச் சட்டத்தின் கீழ் என்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளீர்கள். ஆனால், சிறிது நேரத்துக்குப் பின் துணை நிலை ஆளுநரும், மற்ற அதிகாரிகளும் மெகபூபா வீட்டுக் காவலி்ல் இல்லை என்பார்கள் என்ன இது நகைச்சுவை” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in