

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை நேற்று போலீஸார் கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி குண்டூரில் ஜெகன் மோகன் ரெட்டி, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இதில் அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர். போராட்டத்தின் 5-வது நாளான நேற்று முன்தினம் இவரது உடல் நிலை மோசமடைந்தது. இதனால் மருத்துவர்கள், அவரிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் ஜெகன் மறுத்து விட்டார். இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை போலீஸார் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்து, குண்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.