Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM

ஆந்திராவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட 443 பேர் மருத்துவமனையில் அனுமதி- முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல்

ஆந்திர மாநிலத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட 443 பேர்மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூரு நகரில்கடந்த சனிக்கிழமை இரவு முதல்தொடர்ந்து 3 நாட்களாக பொதுமக்கள் திடீரென மயக்கமடைந்து விழுந்தனர். வாந்தி, மயக்கம், காய்ச்சல், வலிப்பு என பாதிக்கப்பட்டு மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமையன்று இரவு மட்டும் 83 பேர் பாதிக்கப்பட்டு ஏலூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர் களுக்கு ரத்தப் பரிசோதனை செய்ததில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதை அறிந்தனர். காற்று அல்லது தண்ணீர் மூலம் நோய் பரவுகிறதா என கண்டறிய ஏலூரு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி 443 பேர் ஏலூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 230 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதில் 3 பேர் மீண்டும் ஏலூருமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவ மனையில் கடந்த 2 நாட்களாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த காவலர் ஒருவர் நேற்று மதியம் திடீரென மயக்கமடைந்து, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். அவரும் தற்போது சிகிச்சைபெற்று வருகிறார்.

இந்த மர்ம நோய்க்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து முதுகெலும்பில் இருந்து ரத்தம் சேகரித்து, பரிசோதனை செய்து வருகின்றனர். டெல்லியிலிருந்து 9 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவும் இதுகுறித்து ஆய்வு செய்து வருகின்றனர். 16 நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவர்கள் குண்டூர், விஜயவாடா அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏலூரு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள சுமார் 30-க்கும்மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர்தொட்டிகள் சமீபத்தில் சுத்தப்படுத்தப்பட்டன. இது தொற்றுவியாதி இல்லை என்பதால் மக்கள் பயப்படத்தேவையில்லை என மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த மர்ம நோய் குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆந்திர அரசுகடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆந்திரமுதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிநேற்று ஏலூருஅரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் உடல்நலம் விசாரித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமானசிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் ஏலூரு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பஞ்சாயத்து,நகராட்சி சார்பில் தண்ணீர்தொட்டிகள், கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட வேண்டுமெனவும் உத்தரவிட்டார். உரிய பரிசோதனை செய்து அதற்கான அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யுமாறும் கூறினார்.

சந்திரபாபு நாயுடு

இதற்கிடையே தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறும்போது, “சுத்தமில்லாத தண்ணீரால்தான் இதுபோன்ற வியாதிகள் பரவும். ஆதலால் இதற்கு ஆந்திர அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். ஏலூரில் மருத்துவ அவசரநிலையை பிரகடனம் செய்யவேண்டும். ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ரத்தப் பரிசோதனை அறிக்கை மூலம் இந்த நோயை கண்டறிந்து தக்க சிகிச்சை அளித்திடவேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x