

தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளால் பாஜகவுக்கு பலன் கிடைக்கவில்லை என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ் கூறியுள்ளார். எனினும் இந்தக் கூட்டணி அடுத்த சட்டசபை தேர்தலிலும் தொடரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி 'தி இந்து'விடம் முரளிதர் ராவ் கூறுகையில், ‘‘தமிழகத்தில் எவ்வளவு செய்ய எண்ணினோமோ அதை கூட்டணி காரணமாக செய்ய முடியவில்லை. இருப்பினும், இந்த நாடாளுமன்றத்தில் பாஜக மட்டுமல்லாது தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
இந்தமுறை, எதிர்பார்த்தபடி திமுகவின் செயல்பாடுகள் சரியாக இல்லாததால் எதிர்பார்த்த தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்க வில்லை. (எதிர்பார்த்த அளவிற்கு திமுகவின் வாக்குகள் பிரியவில்லை) இதன் முழு பலனும் அதிமுகவுக்கே கிடைத்து விட்டது.
தமிழகத்தில் பாமக, தேமுதிக மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தபோதிலும், அது வெற்றியாக மாறவில்லை. எனினும், பாஜக மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளதால் கூட்டணிக் கட்சிகளுக்கு பலன் கிடைக்கும்.
இதைவைத்து வரும் காலங் களில் பாஜகவை தமிழகத்தில் உறுதிப்படுத்துவோம். கட்சியை வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக் காக தயார்படுத்துவோம். இதிலும் தற்போதைய கட்சிகளின் கூட்டணி தொடரும்’’ எனத் தெரிவித்தார்.