ஆளில்லா ரயில்வே கேட்டில் விபத்தை தடுக்க ரயில் வரும்போது எச்சரிக்கை விடுக்க புதிய கருவி

ஆளில்லா ரயில்வே கேட்டில் விபத்தை தடுக்க ரயில் வரும்போது எச்சரிக்கை விடுக்க புதிய கருவி
Updated on
1 min read

ஆளில்லா ரயில்வே கேட்டில் அடிக்கடி நிகழும் விபத்தைத் தடுப்பதற்காக, ரயில் வருகை குறித்து எச்சரிக்கை விடுப்பதற்கான புதிய கருவியை ரயில்வே துறை கண்டறிந்துள்ளது.

கோயம்புத்தூர்-மேட்டுப் பாளையம் பகுதியில் சோதனை அடிப்படையில் கடந்த 3 மாதங் களாக செயல்பாட்டில் உள்ள இந்த கருவி, திருப்தி அளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஒளியை உமிழக்கூடிய 2 கருவிகள் (பிளிங்கர்ஸ்) மற்றும் ஒரு ஒலி எழுப்பும் கருவி (சைரன்) ஆகியவற்றைக் கொண்டதாக இந்த புதிய கருவி இருக்கும். ஆளில்லா ரயில்வே கேட்டிலிருந்து கிலோ மீட்டர் சுற்றளவில் எந்த திசையில் ரயில் வந்தாலும் பிளிங்கர்ஸ் ஒளிர்வதுடன் சைரன் எச்சரிக்கை ஒலி எழுப்பும்.

ரயில்வே துறையின் ஆராய்ச்சி பிரிவான, ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (ஆர்டிஎஸ்ஓ) இந்த புதிய கருவியை கண்டுபிடித்துள்ளது. இதற்கான தர பரிசோதனை முடிந்ததையடுத்து, இந்த எச்சரிக்கை கருவியை தங்கள் பகுதிக்குட்பட்ட ஆளில்லா ரயில்வே கேட்டில் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் ஆர்டிஎஸ்ஓ பரிந்துரை செய்துள்ளது. இந்தத் தகவலை ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிய கருவி குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, “சோலார் பேனலுடன் பொருத்தப்பட்டுள்ள இந்த புதிய கருவியைத் திருட முடியாது. இந்தக் கருவியை சமூக விரோதிகள் சேதப்படுத்த முயன்றாலோ, திருட முயன்றாலோ ஏற்கெனவே அதனுடன் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பிவிடும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in