

இந்திய மக்கள் நல்லவர்கள் என்று வழிதவறி எல்லை தாண்டி வந்த பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்தியாவின் பக்கம் கவனக்குறைவாக வந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை இந்திய ராணுவம் திங்கள்கிழமை திருப்பி அனுப்பியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுமிகள், லைபா ஜாபைர் மற்றும் சனா ஜாபைர் ஆகிய இருவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கிராமம் ஒன்றில் தங்கள் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் மலைப்பகுதிகளில் நீண்ட தூரம் நடந்து சென்றபோது வழி தெரியாமல் திண்டாடியுள்ளனர்.
தற்செயலாக அவர்கள் டிசம்பர் 6ஆம் தேதி பூஞ்ச் மாவட்டப் பகுதியில் உள்ள இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டனர். எல்லையில் இருந்த ராணுவ வீரர்கள் அவர்களிடம் ஆயுதம் எதுவும் இல்லாதது கண்டு அவர்களைக் கனிவாக அணுகி விசாரணை செய்தனர்.
சிறுமிகள் வழிதெரியாமல் வந்துவிட்டதைக் கேட்டறிந்த ராணுவ வீரர்கள் அவர்களைப் பத்திரமாக மீட்டுவந்து அரசு விடுதியில் தங்கவைத்தனர். உணவு உள்ளிட்ட தேவையான வசதிகள் அவர்களுக்குச் செய்து கொடுக்கப்பட்டன. அவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த ஒரு நாள் கழித்து, இந்திய பாகிஸ்தான் எல்லைக் கிராமமான 'சக்கன் டா பாக்' என்ற இடத்திலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அவர்களது சொந்த இடத்திற்குப் பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதற்கு முன் ஊடகங்களிடம் இச்சிறுமிகள் பேட்டியளித்தனர். இதில் லைபா ஜாபைர் கூறியதாவது:
"நாங்கள் எங்கள் இடத்திற்குச் செல்வதற்கு வழி தெரியாமல் இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டோம். ராணுவ வீரர்கள் எங்களை அடிப்பார்கள் என்று நாங்கள் அஞ்சினோம், ஆனால், அவர்கள் எங்களை நல்ல முறையில் நடத்தினர்.
அவர்கள் எங்களைத் திரும்பிச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்று நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால், இன்று நாங்கள் வீட்டிற்கு அனுப்பப்படுகிறோம். இங்குள்ள இந்திய மக்கள் மிகவும் நல்லவர்கள்''.
இவ்வாறு லைபா ஜாபைர் தெரிவித்தார்.