மீண்டும் பாஜகவில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி

மீண்டும் பாஜகவில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி
Updated on
1 min read

நடிகை விஜயசாந்தி இன்று பாஜகவில் இணைந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழி திரைப் படங்களில் துணிச்சல் மிக்ககதாபாத்திரங்களில் நடித்துபுகழ்பெற்றவர் விஜயசாந்தி. திடீரென இவர் ‘தல்லி தெலங்கானா’ எனும் அரசியில் கட்சியை தொடங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதன் பின்னர், அக்கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் தெலங்கானா ராஷ்டிர சமிதியில் இணைந்தார். அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் இவரை, வீரமிக்க தெலங்கானா சகோதரி என அறிவித்தார். ஆனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு வந்ததால், டிஆர் எஸ் கட்சியிலிருந்து விஜயசாந்தி விலகினார்.

கடந்த தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால், தெலங்கானாவில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியில் பிரச்சாரக் குழுவின் தலைவராக விஜயசாந்தி இருந்தார்.

அண்மையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை டெல்லியில் விஜயசாந்தி சந்தித்தார். இதையடுத்து காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் அவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில், விஜயசாந்தி மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டியை நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் இன்று பாஜகவில் முறைப்படி இணைந்தார்.

டெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, தெலங்கானா மாநில பாஜக தலைவர் சஞ்சய் பந்தி உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் இணைந்தார். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விஜய சாந்தி சந்தித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in