

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான நேற்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்பினர் பிஹாரில் ஒட்டிய சுவரொட்டியால் சர்ச்சையானது. இதன் மீது வழக்கு பதிவு செய்து அம்மாநிலக் காவல்துறை விசாரணை துவக்கி உள்ளது.
பிஹாரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாவட்டம் கத்தியார். இதன் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் ஒரு சுவரொட்டி நேற்று ஒட்டப்பட்டிருந்தது.
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் டிசம்பர் 6, 1992 இல் இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் படம் அதில் பெரிதாக இடம் பெற்றிருந்தது. இதன் கீழே, ‘பாபர் மசூதி ஒருநாள் மீண்டும் எழும். டிசம்பர் 6, 1992 நாள் மறக்கப்படும்.’ என உருது மொழியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சமீப காலமாக முஸ்லிம்கள் இடையே எழுச்சி பெற்று வரும் பிஎப்ஐ அமைப்பின் சார்பில் ஒட்டப்பட்டதாகவும் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதன் மீது கத்தியார் மாவட்டக் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.
இது குறித்து பிஹாரின் துணை முதல்வரும் கத்தியார் தொகுதியின் பாஜக எல்எல்ஏவுமான தர்கிஷோர் பிரசாத் கூறும்போது, ‘இப்பிரச்சனையில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க உள்ளது. இதுபோன்ற தீயசக்திகளை கண்டறிந்து தண்டிக்கப்பட வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 3 இல் மத்திய அமலாக்கத்துறை சார்பில் நாடு முழுவதிலும் பிஎப்ஐயின் அலுவலகம் உள்ள 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த அமைப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றில் மத்திய அரசிற்கு எதிராக போராட்டங்களை நடத்தி இருந்தது.