

குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் காலை வரை ரிக்டர் அளவில் 1.7 முதல் 3.3 வரையான 19 முறை லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் எந்தவொரு விபத்து அல்லது சேதாரம் குறித்த தகவல் எதுவும் இல்லை.
இதுகுறித்து காந்தி நகரத்தில் அமைந்துள்ள நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவன (ஐ.எஸ்.ஆர்) இயக்குனர் சுமர் சோப்ரா கூறியதாவது:
''திங்கள் கிழமை அதிகாலை 1.42 மணி முதல் 19 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன 1.7 முதல் 3.3 வரை தீவிரம் கொண்டவை. சவுராஷ்டிராவின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தலாலாவின் கிழக்கு-வடகிழக்கு மையப் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கங்களில் பெரும்பாலானவை 3 ரிக்டர் அளவிற்குக் குறைவானவை என்றாலும், ஆறு நிலநடுக்கங்கள் 3 ரிக்டருக்கும் மேற்பட்ட தீவிரங்களைக் கொண்டிருந்தன. இதில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதிகாலை 3.46 மணிக்குப் பதிவாகியுள்ளது. இவற்றின் ஆழம் 12 கி.மீ. ஆக உணரப்பட்டது.
காலை 9.26 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவில் தலாலாவின் கிழக்கு-வடகிழக்கில் 11 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டது. 19 நிலநடுக்கங்களில் மூன்று நிலநடுக்கங்கள் 3.1 ரிக்டர் அளவிலானவை.
நீடிக்கும் பருவமழையே காரணம்
கிர் சோம்நாத் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வுகள் அனைத்தும் பருவமழையால் தூண்டப்பட்ட நில அதிர்வுகளே. இதனால் கவலைப்பட ஒன்றுமில்லை. பொதுவாக குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தின் ஒருசில பகுதிகளில் இரண்டு, மூன்று மாதங்கள் நீடிக்கும். கனமழைக்குப் பிறகு இப்படி ஏற்படுகின்றன.
பருவமழை வழக்கததை விட அதிகரிக்கும்போது, இரண்டு, மூன்று மாத மழைக்குப் பிறகு இதுபோன்ற நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றன. அதிர்வெண் மாறுபடும். ஆனால், கிர் சோம்நாத் மாவட்டம் தலாலாவிலும், முன்பு இதேபோன்ற செயல்பாட்டைக் காணமுடிந்த போர்பந்தர் மற்றும் ஜாம்நகரிலும் பொதுவாக ஆண்டுதோறும் இந்தக் காலகட்டத்தில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால் இப்போது அது குறைந்துவிட்டது.
சமீபத்தில், போர்பந்தர் பகுதியில் இதே போன்று ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு இப்படிக் காணப்படவில்லை. காரணம், இந்தப் பகுதிகளில் உள்ள பாறைகள் முறிந்துவிட்டன. முறிவுப்பகுதிகளிலிருந்து நீர் வெளியேறும்போது, துளை அழுத்தம் உருவாகிறது. பாறைகள் ஏற்கெனவே தீவிரமாக அழுத்தம் கொண்டுள்ளன. நீர் தற்போதுள்ள அழுத்தத்தை அதிகரிக்கிறது, இதனால் நிலநடுக்கம் ஏற்படுகிறது. புவியியலில் இவை சிறிய நடவடிக்கைகளே. இதனால் கவலைப்பட ஒன்றுமில்லை''.
இவ்வாறு சுமர் சோப்ரா தெரிவித்தார்.