

விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது சகோதரர் சத்யநாராயணாவை சந்தித்து ஆசி பெற்றார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார். ஆனால், கட்சி தொடங்காமல் 3 ஆண்டுகளைக் கடத்திய அவர் திடீரென ஜனவரியில் கட்சி தொடக்கம், டிச.31-ம் தேதி அறிவிப்பு என ட்விட்டரில் அறிவித்துப் பின்னர் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தமிழகத்தின் தலை எழுத்தை மாற்ற வேண்டும், அனைத்தையும் மாற்ற வேண்டும், இப்போது இல்லைன்னா எப்போதும் இல்லை என்று பேசி த் தனது மக்கள் மன்றத்துக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி என்கிற முன்னாள் பாஜக நிர்வாகியை நியமித்து அறிமுகப்படுத்தினார். பின்னர் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராக நியமித்தார்.
இந்தநிலையில் ரஜினிகாந்த் திடீரென நேற்று பெங்களூரு சென்றார். ஆனால் அவரது பயணம் குறித்த விவரங்கள் வெளியாகாமல் இருந்தது. தனது மூத்த சகோதரர் சத்தியநாராயணாவை நேற்று பெங்களூரில் ரஜினிகாந்த் சந்தித்தார். அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக ரஜினிகாந்த் நேற்று சத்யநாராயணாவிடம் ஆசி பெற்றார்.