

இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன.
அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 90 சதவீதம் பலன் அளித்திருப்பதாகத் தகவல் வெளியானது.
கரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருத்துவக் குழுவினர்களுக்கு நம்பிக்கை வழங்கியுள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவும் தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 என்ற கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளன.
லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தலைமையில் கண்டுபிடிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளது.
பைசர் மருந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்துக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பைசர்- பயோஎன்டெக்கின் கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) அளித்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டது.
கரோனா தடுப்பு மருந்து முதியவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முதலில் அளிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பைசர் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் பைசர் இந்தியா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில் பைசர் நிறுவனத்தை தொடர்ந்து இந்தியாவில் தங்கள் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சீரம் நிறுவனமும் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் கரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.
சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா அளித்த பேட்டியில் கரோனாவை தடுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை இன்னும் 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர விண்ணப்பிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஏற்கெனவே கூறியிருந்தார். அதன்படி அந்நிறுவனம் விண்ணபித்துள்ளதாக கூறப்படுகிறது.
2021 ஜூலை மாதத்திற்குள் இந்திய அரசு 30 முதல் 40 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்கும் என அந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணயில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் பயோடெக் பார்க், புனேயில் உள்ள சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.