

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மீண்டும் ஜெர்மன் மொழி கற்றுத் தரப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயாவில் பயிலும் மாணவர்கள் விருப்பப்பாடமாக ஜெர்மன் மொழியை தேர்வு செய்து படிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் இடைநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதல்மொழியாக ஆங்கிலமும், இரண்டாவதாக பிராந்திய மொழியும், மூன்றாவதாக சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு நவீன இந்திய மொழியும் கற்றுத் தரப்பட்டு வந்தன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழியை கற்பிக்க முந்தைய மத்திய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து 2011-12 ஆம் கல்வியாண்டிலிருந்து மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்திற்குப் பதிலாக வெளிநாட்டு மொழி அறிமுகம் செய்யப்பட்டது.
மொத்தமுள்ள 1092 கேந்திரிய வித்யாலயாக்களில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியை தேர்ந்தெடுத்தன. இப்பள்ளிகளில் உள்ள 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜெர்மன் மொழியை படித்து வந்தனர். இம்மொழியைக் கற்றுத் தருவதற்காக ஜெர்மன் அரசு ஆதரவுடன் இயங்கும் மாக்ஸ்முல்லர் பவன் நிர்வாகத்துடன் கேந்திரிய வித்யாலயா ஒப்பந்தம் செய்துகொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப்பாடத்தை உடனடியாக ரத்து செய்து விட்டு அதற்குப் பதிலாக சமஸ்கிருதப் பாடத்தைக் கற்றுத்தர வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், இதற்கு பரவலாக எதிர்ப்புக் கிளம்பியது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப் பாடம் கற்பித்தலை கைவிட வேண்டாம் என பிரதமர் மோடியிடம் ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா இந்தியா வந்துள்ளார். மோடி - மெர்கல் சந்திப்பின்போது 18 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை பேணும் ஒரு பகுதியாக ஜெர்மன் அரசு ஆதரவுடன் இயங்கும் மாக்ஸ்முல்லர் பவன் நிர்வாகத்துடன் கேந்திரிய வித்யாலயா பள்ளி புதிதாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. அதன்படி இந்தியாவில் ஜெர்மன் மொழி ஊக்குவிக்கப்படும் அதேபோல் ஜெர்மனியில் நவீன இந்திய மொழிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக ஜெர்மன் கல்வி அமைச்சர் ஜோஹனா வாங்காவுடன் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆலோசனை மேற்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.