

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தை சேர்ந்த ஐஏஎஸ் டி.கே.ரவி (34) பெங்களூருவில் வணிக வரித்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். ரவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால், சிபிஐ விசாரணைக்கு உத்தர விடப்பட்டது.
கடந்த 6 மாதங்களாக நடை பெற்ற சிபிஐ விசாரணையில், டி.கே.ரவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதிகாரி களின் அழுத்தம், அரசியல்வாதி களின் அச்சுறுத்தல் ஆகியவற் றுக்கும் ஆதாரம் இல்லை. தனிப் பட்ட முறையிலும், குடும்பத்திலும் ரவிக்கு பல பிரச்சினைகள் இருந் தது. இதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டி ருக்கலாம் என சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.
சிபிஐ அதிகாரிகள், ரவியின் வழக்கு தொடர்பாக அறிக்கை தயாரித்து டெல்லியில் உள்ள தலைமையகத்துக்கு அனுப்பியுள்ளனர். இந்த அறிக்கை ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து டி.கே.ரவியின் தாயார் கவுரம்மா கூறும்போது, ''எனது மகன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல. ரவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவருக்கு நெருக்கமான அனைவரும் தெரிவித்தோம். இருப்பினும் சிபிஐ விசாரணையில் உண்மை கண்டுபிடிக்கப்படவில்லை.
சிபிஐ அதிகாரிகள் ரவியின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடத்தாமல், முதலில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை ஏற்று கொண்டுள்ளனர்''என்றார்.