

இந்தியாவில் கரோனா தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,03,248 ஆக இன்று பதிவாகியுள்ளது. கடந்த 138 நாட்களில் இதுவே குறைவான எண்ணிக்கையாகும். கடந்த ஜூலை 21-ஆம் தேதி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,02,529 ஆக இருந்தது.
கடந்த ஒன்பது நாட்களைப் போலவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, புதிதாக தொற்று ஏற்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாகப் பதிவாகியுள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 4.18% பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 36,011 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதே காலகட்டத்தில் 41,970 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையில் 6441 குறைந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் ஒரு மில்லியன் பேரில் 186 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டிருப்பது உலகில் மிகக் குறைந்த அளவாகும்.
இந்தியாவில் தற்போது குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தைத் தாண்டி 91,00,792 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோர் மற்றும் தற்போது சிகிச்சை பெற்று வருவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து சீராக அதிகரித்து இன்று 87 லட்சத்தை நெருங்கியுள்ளது (86,97,544).
புதிதாகக் குணமடைந்தோரில் 76.6% பேர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5,834 பேரும், கேரளாவில் 5820 பேரும், தில்லியில் 4,916 பேரும் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.
புதிதாகத் தொற்று ஏற்பட்டவர்களில் 75.70% பேர், 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளாவில் 5,848 பேருக்கும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 4,922 பேருக்கும், தில்லியில் 3,419 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 482 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 79.05 சதவீதத்தினர் 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 95 பேரும், அதைத் தொடர்ந்து தில்லியில் 77 பேரும், மேற்கு வங்கத்தில் 49 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் ஒரு மில்லியன் பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இது உலக அளவில் பதிவான குறைவான எண்ணிக்கைகளுள் ஒன்று.