

அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம் என்று அவரது நினைவுதினத்தில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலியை பதிவிட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகரும் சட்டமேதையுமான பி.ஆர்.அம்பேத்கர் 1956ல் காலமானார். அம்பேத்கரின் 64வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மறைந்த சட்ட மேதை நினைவுதினத்தில் இன்று நாட்டில் பல்வேறு தலைவர்களும் தனது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
சிறந்த தலைவரான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மறைந்த தினமான இன்று மீண்டும் நினைவு கூறப்படுகிறார். அவரது எண்ணங்களும் லட்சியங்களும் மில்லியன் கணக்கானவர்களுக்கு தொடர்ந்து பலத்தைத் தருகின்றன. நம் தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்.
இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி அஞ்சலி
அம்பேத்கர் நினைவைப் போற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அஞ்சலியில் கூறியுள்ளதாவது:
"தேசத்தைக் கட்டியெழுப்புவதில் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பை இன்று நாம் நினைவில் கொள்கிறோம்.
இந்தியாவை அனைத்து விதமான பாகுபாடுகளிலிருந்தும் விடுவிப்பதற்காக பணியாற்றுவதுதான் அவருக்கு மரியாதை செலுத்துவதற்கான ஒரே உண்மையான வழியாகும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.