

கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை எதிர்க்க காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் இணைந்து பல்வேறு இடங்களில் செயல்படுகிறார்கள். எம்எல்ஏக்களை மத்தியஅரசால் விலைக்கு வாங்க முடியாததால், விசாரணை அமைப்புகளை அரசுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர் என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத் தேர்தல் டிசம்பர் 8-ம் தேதியும், 2-ம் கட்டம் 10-ம் தேதியும், 3-ம் கட்டம் 14-ம் தேதியும், 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.
இந்தத் தேர்தலில் மொத்தம் 36,305 பெண் வேட்பாளர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் உள்பட 74,899 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் 8,387 வேட்பாளர்கள் அதிகபட்சமாக களத்தில் உள்ளனர். வயநாட்டில் 1,857 வேட்பாளர்கள் குறைந்தபட்சமாக போட்டியிடுகின்றனர்.
டிசம்பர் 8-ம் தேதி நடக்கும் முதல் கட்டத் தேர்தல் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி மாவட்டங்களுக்கு நடக்கிறது. 10-ம் தேதி நடக்கும் 2-ம் கட்டத் தேர்தல் கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கும் 14-ம் தேதி நடக்கும் 3-ம் கட்டத் தேர்தல் மலப்புரம், கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் நடக்கிறது.
941 கிராம பஞ்சாயத்துகள், 152 மண்டல பஞ்சாயத்துகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 86 நகராட்சிகள், 6 மாநகராட்சிகளுக்கு பிரதிநிதிகளை 2.76 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்காக காணொலி மூலம் பிரச்சாரத்தை நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
" கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாது என மத்தியஅரசுக்குத் தெரியும். அதனால்தான் மாநிலத்தில் ஆளும் அரசுக்கு விசாரணை அமைப்புகள் மூலம் தொந்தரவு கொடுக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியும், முஸ்லிம் லீக்கும் சேர்ந்து கொண்டு மத்திய அரசை ஊக்குவிக்கின்றன.
மாநிலத்தில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் பாஜக, காங்கிரஸ் ஆதரவுடன், இரு கட்சிகளின் இணைந்த ஆதரவுடன் போட்டியிடுகிறார்கள். ஆளும் இடதுசாரி அரசை எதிர்க்க பல்வேறு இடங்களில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து செயல்படுகிறார்கள்.
நான் கேட்கிறேன், இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் ஏன் ஒரு வார்த்தைகூட விமர்சி்க்காதது ஏன். பாஜகவுக்கு எதிராக நாடுமுழுவதும் போரட்டம் நடந்தும் காங்கிரஸ் இங்கு விமர்சிக்கவில்லை.
வகுப்புவாதத்துக்கு எதிராகவும், மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவதிலும் நமது மாநிலம் முன்னணியில் இருக்கிறது. வகுப்புவாதத்துக்கு எதிராக எப்போதும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு போராடுகிறது.
எதுசரியானதோ அதற்காக துணிந்து நிலைத்துப் போராடுவோம். வகுப்புவாத சக்திகளுக்கிடம் பணிந்து செல்வது நமது நிலைப்பாடு அல்ல. சில வாக்குகளுக்காக அரசியலில் தரம்தாழ்ந்து செல்ல இடதுசாரிகள் தயாராக இல்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, ஜமாத் இ இஸ்லாமியுடன் கைகோர்த்து செயல்படுகிறது. ஆனால், தேர்தலுக்குப்பின் ஐயுஎம்எல் கட்சி் அதன் தவறை உணரும்.
அனைத்துத் தேர்தலிலும், ஆளும அரசு என்ன செய்துள்ளது என்று மக்களிடம் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும். ஆனால், இந்தத் தேர்தலில், இந்த கேள்வியை எந்த கட்சியும் எழுப்பமுடியாத அளவில் நாங்கள் ஆட்சி செய்கிறோம். மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து மக்கள் நன்றாக உணர்கிறார்கள்.
உலகமே கரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில், கேரள மாநிலம் முன்னுதாரணமாக இருந்தது. நிதிப்பற்றாக்குறை இருந்தபோதிலும், இலவச மருத்துவசிகிச்சை, ரேஷன் பொருட்கள், சமூக ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்டவற்றை அரசு வழங்கியது.
நாங்கள் பணக்கார மாநிலம் இல்லை. எங்கள் கஜானாக்கள் நிரம்பியிருக்கவில்லை. ஆனால், ஏழை மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற உறுதிபூண்டுள்ளோம்.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.